எட்டுப் பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தினுள் மீண்டும் பத்துப் பேர் சுட்டுக் கொலை. இது கொலராடோவில்.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் அட்லாந்தாவில் 21 வயதான ஒருவன் வெவ்வேறு இடங்களில் உடல் பிடித்துவிடும் பெண்கள் எட்டுப் பேரைச் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி அடங்கமுதல் அமெரிக்காவில் மீண்டும் பத்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களிலொருவர், அவ்விடத்துக்கு முதலில் வந்த பொலீஸ் அதிகாரியாகும்.
போல்டர், கொலராடோ, டென்வரில் ஒரு அங்காடியில் இந்தப் பத்துப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு விரைந்து வந்த 51 வயதான எரிக் டலி என்ற பொலீஸ் அதிகாரியும் இறந்தவர்களில் ஒருவராகும். ஏழு பிள்ளைகளின் தந்தையான எரிக் டலியின் கடைசிப் பிள்ளையின் வயது ஏழு மட்டுமே. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது விபரங்களைப் பொலீசார் இன்னும் வெளியிடவில்லை.
இவ்வருடத்தில் அமெரிக்காவில் நடந்த இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளில் இது ஏழாவது கொலைகளாகும். டென்வர் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலிருக்கிறது இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் நடந்த இடம். டென்வர் பிராந்தியம் 1999 இல் கொலம்பைன் ஹை ஸ்கூலில் நடந்த 13 கொலைகள் சர்வதேசத்தையே அதிர வைத்தவையாகும். அதையடுத்து 2012 இல் பட்மான் சினிமா வெளியிடப்பட்டபோது சினிமாக் கொட்டகைக்குள் 12 பேரைச் சுட்டுக் கொன்று 70 பேரைக் காயப்படுத்தினான் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் என்ற முன்னர் எந்தக் குற்றங்களிலும் ஈடுபடாத ஒருவன்.
சாள்ஸ் ஜெ. போமன்