தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன.
இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளின் உதவியைக் கோருகின்றன. இவ்வைந்து நாடுகளின் உள்துறை அமைச்சர்களும் ஏதனில் சந்தித்துக்கொண்டனர்.
ஏதனில் அந்த ஐந்து அமைச்சர்களும் சேர்ந்து பேசிய கூட்டத்தில், கிரீஸின் பிரதமர் கிரியாக்கோஸ் மிட்ஸோதாக்கிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உப தலைவர் மார்கரீத்திஸ் ஷீனாஸ் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள். தாம் ஒன்று கூடிப் பேசித் தமது நிலைமையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு முன்னர் வைக்கலாம் என்று எண்ணும் MED 5 நாடுகள், தமது நாடுகளில் புவியியல் இடத்துக்காகத் தாம் தண்டிக்கப்படலாகாது என்று கருதுகின்றன.
2015 ம் ஆண்டு இந்த நாடுகளில் குவிந்த அகதிகளைக் கையாள முடியாமல் ஐரோப்பிய ஒன்றியமே திணறிப்போய், அவர்களிடையே இந்தக் கேள்வி பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அவ்வருடம் சுமார் 1.2 மில்லியன் அகதிகள் இந்த நாடுகளின் எல்லைகளுக்கு வந்தார்கள்.
தென் ஐரோப்பிய நாடுகளான இவை ஐந்தும் தமது வட ஐரோப்பியச் சக நாடுகள் தமது பாரத்தின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டுமென்று கோருகின்றன. அத்துடன், மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா, மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் ஐரோப்பாவை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கவேண்டுமென்றும் கோருகின்றன.
2016 முதல் படிப்படியாக அகதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், கொரோனாக் கட்டுப்பாடுகள் அதற்கு முக்கிய ஒரு காரணமென்று குறிப்பிடப்படுகிறது. முன்னரைப் போல மக்கள் பிரயாணிப்பது அனுமதிக்கப்படும்போது மிகப் பெருமளவில் ஐரோப்பாவில் தஞ்சம் புக வருபவர்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்