இந்தச் செவ்வாயன்று தடுப்பு மருந்தெடுக்கும் புத்தின் எந்த மருந்தைத் தேர்வுசெய்வார்?

எவருக்குமே தமது தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி விபரங்களைப் பகிரங்கப்படுத்தாமல், கௌரவம் மிக்க ஒரு சர்வதேச விஞ்ஞான சஞ்சிகையின் ஆராய்வுக்குள்ளாக்கி அதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடுப்பு மருந்து ஸ்புட்நிக் V. ஆனாலும் ரஷ்யாவில் தடுப்பு மருந்துகள் கொடுக்கும் வேகம் மந்தம். ரஷ்யத் தலைவரே இதுவரை அந்த மருந்தை ஏன் எடுத்துக்கொள்ளவில்லையென்பது இன்னொரு புதிர். 

68 வயதான விளாமிடிர் புத்தின் தான் இன்று, செவ்வாயன்று தடுப்பு மருந்து போடப்போவதாகச் சொல்லியிருக்கிறார். புதிய புதிர், அவர் எந்த மருந்தைப் போட்டுக்கொள்வார் என்பதாக மாறியிருக்கிறது. “எல்லாமே நல்ல தடுப்பு மருந்துகளே,” என்று பதில் சொல்லியிருக்கிறார் புத்தினின் காரியதரிசி, புத்தின் எந்தத் தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளப்போகிறார் என்ற கேள்விக்கு. 

கடந்த வருடம் அதிகமாக மனிதர்களிடையே பாவித்து ஆராயமுன்னரே ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துக்கு ரஷ்யாவில் பாவிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. சமீபத்தில் EpiVacCorona, CoviVac ஆகிய மேலுமிரண்டு தடுப்பு மருந்துகளை ரஷ்யாவில் பாவிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இவையிரண்டும் கூட தமது இறுதிக்கட்ட மனிதர்கள் மீதான பாவிப்புப் பரிசோதனை முடியாதவையே என்று குறிப்பிடப்படுகிறது. 

140 மில்லியன் மக்களைக் கொண்ட ரஷ்யாவின் 4.3 % இரண்டு தடுப்பூசிகளையும் 6.3 % ஒரு தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டதாக ரஷ்யத் தலைமை அறிவிக்கிறது. பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவான அளவாகும். தடுப்பூசி போடும் வேகம் மந்தமாக இருக்க முக்கிய காரணங்களிலொன்றாக மக்களின் நம்பிக்கையின்மை சுட்டிக் காட்டப்படுகிறது.  

தான் காமராக்களுக்கு முன்னால் தடுப்பு மருந்து எடுக்கப்போவதில்லையென்று முன்பு தெரிவித்திருக்கிறார் புத்தின். இன்று, அவர் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் ஒரு பொது இடத்திலா என்பதுபற்றி அறிவிக்கப்படவில்லை. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *