1800 களில் சூறையாடிய பெனின் சாம்ராச்சியக் கலைப்பொருட்களை ஜேர்மனி திருப்பிக் கொடுக்கப்போகிறது.
ஐரோப்பிய நாடுகள் தமது காலனித்துவக் காலத்தில் தமக்குக் கீழேயிருந்த நாடுகளின் கலைப் பொருட்களைச் சூறையாடிக்கொள்வது வழக்கமாக இருந்தது. அப்படியான கலைப்பொருகளைத் தற்போதைய ஐரோப்பிய நாட்டு அருங்காட்சியகங்களில் காணலாம். சமீப காலத்தில் அவைகளைத் திரும்பிப்பெறவேண்டி சில நாடுகள் முயற்சித்து வருகின்றன.
சூறையாடிய பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும் முதல் நாடுகளிலொன்றாக ஜேர்மனி ஆகலாம் என்று தெரிகிறது. தற்போது நைஜீரியா என்ற பெயரிலிருக்கும் நாட்டின் பழைய பெனின் சாம்ராச்சியக் கலைப்பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஜேர்மனி ஈடுபட்டு வருகிறது. இதற்காகக் கடந்த வாரம் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் நைஜீரியாவுக்குப் பயணமாகியிருந்தார்கள். வரும் கோடை காலத்தில்
அப்பொருட்கள் நைஜீரியாவுக்கு அனுப்பப்படலாமெனத் தெரிகிறது.
கலைப்பொருட்கள் எனப்படும் சிலைகள், கைவேலைப் பொருட்கள் பெரும்பாலும் பெனின் சாம்ராச்சியத்தின் கால தெய்வ வழிபாட்டுத் தலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. நைஜீரியாவில் அவை அங்கு வாழும் வெவ்வேறு இன மக்களின் மூதாதையர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
பிரிட்டிஷ் இராணுவத்தினர் 1897 ம் ஆண்டில் பெனின் சாம்ராச்சியத்தின் கலைப்பொருட்கள் சுமார் 5,000 ஐ சூறையாடினார்கள். அப்பொருட்கள் ஐரோப்பிய அருங்காட்சியகங்களிலும் அமெரிக்காவிலும், சில தனியார்களிடமும் வர்த்தகம் மூலம் போய்ச் சேர்ந்திருக்கின்றன. சர்வதேச அருங்காட்சியக மத்திய அமைப்பின் மூலம் அப்படியான கலைப்பொருட்களை அந்தந்த நாடுகளிடம் கையளிப்பது பற்றிய வரையறைகள் சிந்திக்கப்பட்டு வருகின்றன. அப்படியான கையளிப்புக்கள் இவ்வருட இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்