தஞ்சம் கோர வருபவர்களைக் கடுமையாக வடிகட்டும் சட்ட விதிகளைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தது ஐக்கிய ராச்சியம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதற்காக மக்கள் வாக்களிக்க முக்கிய காரணங்களிலொன்றாக இருந்தது குடிபுக வருபவர்களைக் குறைக்கவேண்டும் என்பது. அதுவே 2015 இன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய குறியாகவும் ஆகி அதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

“தஞ்சம் கோர வருபவர்களுக்கான அடிப்படைச் சட்டங்கள், யாருக்கு அதற்கான அவசியமிருக்கின்றது என்ற விடயத்தில்தான் தங்கியிருக்குமே தவிர எவரால் அதிக பணத்தைக் கடத்தல்காரர்களுக்குக் கொடுக்க முடிகிறது என்பதிலல்ல,” என்கிறார் உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேல். “தமது நாடுகளில் அரசியல் பிரச்சினைகளால் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு மட்டும் உதவும் பல வழிகளை உண்டாக்கியிருக்கிறோம். இப்போது நடந்துவரும் “மனிதக் கடத்தல் – அகதிகள்” முறையை ஒழித்துக்கட்டவேண்டும். தஞ்சம் தேடி வருபவர்களுக்கான பாதுகாப்பான பாதைகளைப் பற்றிக் கவனம் செலுத்தவேண்டும். இப்போதிருக்கும் தஞ்சம் கோருபவர்களுக்கான வரைமுறைகள் பல ஓட்டைகளைக் கொண்டிருக்கின்றன,” என்று விபரிக்கிறார். இன்றிரவு இவ்விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2016 பிரெக்ஸிட் ஆதரவு பக்கத்தால் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகளே அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன என்று கொள்ளலாம். “எங்கள் குறிக்கோளுக்கான நேர்மறை நடவடிக்கைகள் இவை. இவை மூலம் உண்மையாக அடைக்கலம் தேடுபவர்களுக்கு உதவி, களவாக நாட்டுக்குள் நுழைபவர்களையும், அவர்களைக் கடத்திப் பணம் சம்பாதிக்கிறவர்களையும் தண்டிக்கவேண்டும்,” என்கிறார் பிரதமர் போரிஸ் ஜோன்சன். 

“உள்ளே நுழைபவர்களில் 60 % தஞ்சம் கோருபவர்கள் ஏற்கனவே பாதுகாப்பான பிரான்ஸ் போன்ற நாடுகளைத் தாண்டி வந்தவர்கள். அவர்களுக்கு எங்கள் தஞ்சம் கொடுக்கும் வழிகள் திறக்கலாகாது. கள்ளத்தனமாக வந்து தஞ்சம் கோருபவர்களுக்கு, நேர்மையான முறையில் நுழைபவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் கொடுக்கப்படாது,” என்கிறார் பிரீதி பட்டேல். 

மனிதாபிமான அமைப்புக்கள், அகதிகளுக்கு உதவும் அமைப்புக்கள் பிரிட்டிஷ் அரசின் புதிய அகதிகள் வரையறைகளைக் கண்டிக்கின்றன. “இதன் மூலம் தஞ்சம் கோருகிறவர் எப்படி நாட்டுக்குள் வந்திருக்கிறார் என்பது முதலாவதாகக் கவனிக்கப்படுகிறது. அந்த நபருக்குத் தஞ்சம் தேவையாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது இரண்டாம் பட்சமாகிறது,” என்கிறது செஞ்சிலுவைச் சங்கத்தின் விமர்சனம். 

பொய்யாகத் தம்மை வயது குறைந்தவர்களாகக் காட்டித் தஞ்சம் கோரும் வயது வந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தஞ்சம் கோரி மறுக்கப்பட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது ஆகியவையும் வரவிருக்கும் அகதிகள் கட்டுப்பாடுகளில் முக்கியத்துவம் பெறுமென்று குறிப்பிடப்படுகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *