இவ்வருட இறுதியில் உலகின் 10 வயதுக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு எழுத வாசிக்கத் தெரியாமலிருக்கும்.

கடந்த வருட ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனாத் தொற்றுக்களால் மூடப்பட்ட கல்விக்கூடங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய திடுக்கிடவைக்கக்கூடிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் ஒன்றாக “ONE” என்ற அமைப்பு “இவ்வருட இறுதியில் உலகின் பத்து வயதினரில் பாதிப்பேருக்கு எழுத வாசிக்கத் தெரியாமலிருப்பார்கள்,” என்று எச்சரிக்கிறது. 

யுனெஸ்கோ மற்றும் உலக வங்கிகள் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்களை வைத்து ஆராய்ந்த ONE அமைப்பு பத்து வயதினரிடையே இந்த நிலைமையில் 17 விகித அதிகரிப்புக்குக் காரணம் கொரோனாத் தொற்றுக்களின் விளைவாகும் என்கிறது. ONE நிறுவனம் கடுமையான வறுமையுள்ள சமூகங்களிடையே சேவை செய்கிறது.  

தூரத்திலிருந்து டிஜிடல் தொழில்நுட்பம் மூலமான கல்வியில் ஈடுபடும் வசதி உலகின் 500 மில்லியன் பிள்ளைகளுக்குக் கிடைக்கவில்லை என்கிறது யுனெஸ்கோ [UNESCO] அமைப்பு. அத்தொகை உலகின் மூன்றிலொரு பகுதி பள்ளிச்சிறார்களாகும். 

தொழில்நுட்ப வசதிகளைப் பாவிக்க வழியில்லாததால் கல்வியை இழந்துவரும் மாணவர்களில் ஒரு பகுதியினர் நிலைமை சீரானபின் ஓரளவு தாம் இழந்ததைப் பெற்றுக்கொள்ளக்கூடும். ஆனால், மிக வறிய சமூகத்துப் பிள்ளைகளுக்கு இழந்தது முழுக் கல்விக்காலமாகவே இருக்கும் என்கிறது One அமைப்பு. 

கொரோனாக்காலம் பற்றிக் குறிப்பிடும் பெரும்பாலான அரசுகள் பொருளாதார, மக்கள் ஆரோக்கியம் பற்றிப் பேசுகின்றன. ஆனால், கல்வியறிவு இழப்பானது வறிய சமூகங்களின் எதிர்காலத்தையே அழித்துவிடும். எனவே இதுபற்றிய நடவடிக்கைகளில் அரசுகளும், உதவி அமைப்புக்களும் உடனடியாக இறங்கவேண்டும் என்கிறது  One

அமைப்பு.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *