கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த வுஹான் நகரக் குடிமக்கள் அனைவரையும் மீண்டும் பரிசோதிக்கப்போகிறார்கள்.

கொவிட் 19 தொற்றுவியாதியைக் குறிப்பிடும்போது வுஹான் நகரமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. படு மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த நகர மக்கள் சகஜ நிலைக்கு வந்து சில மாதங்களாகின்றன. ஆனால், சமீபத்தில் அந்த நகருக்கு வேலைக்கு வந்த ஏழு தொழிலாளிகளிடையே கொரோனாத் தொற்றைக் கண்டிருப்பதால் நகரின் பதினொரு மில்லியன் குடிமக்களையும் பரிசோதிக்கப்போவதாக அறிவிக்கப்படுகிறது.

சீனாவில் சமீப வாரங்களில் டெல்டா திரிபு கொவிட் 19 பரவி வருவதாகச் செய்திகள் வந்திருந்தன. நஞ்ஜியாங் நகர விமான நிலையத் துப்பரவாளர்களிடையே ஆரம்பத்தில் அது காணப்பட்டது. நாடெங்கும் பல நகரங்களில் அது பரவியிருப்பதாகச் சந்தேகப்படுகிறார்கள் அதிகாரிகள். எனவே, பிராந்தியங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கள் வெட்டப்பட்டு எல்லோரையும் அவரவர் நகரங்களிலேயே இருக்கப் பணித்திருக்கிறது சீன அரசு.

இதுவரை வெவ்வேறு நகரங்களில் சமீப நாட்களில் 61 பேருக்குத் தொற்றுக்கள் பரவியிருப்பதாகத் தெரியவருகிறது. எனவே பீஜிங் உட்பட்ட சில நகரக் குடிமக்கள் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களிடையே  கொவிட் 19 தொற்றுப் பரிசீலனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை அவரவர் ஊருக்குத் திரும்பும்படியும், பொழுதுபோக்கு மையங்களைத் தவிர்க்கும்படியும் அரசு மக்களுக்குப் பணித்திருக்கிறது.

கொரோனாத் தொற்றுக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாட்டையே கடுமையான சட்டங்களுடன் பூட்டிவைத்திருந்தது சீனா என்பது சர்வதேசம் அறிந்ததே. அவ்வியாதியை உள்நாட்டுக்குள் பரவாமல் தடுப்பதில் வெற்றிகண்டு மீண்டும் நாட்டை வெற்றிகரமாக இயங்கவைத்திருக்கிறது சீனா. அதையும் மீறி ஜூலை மாதத்திலிருந்து 4,000 கொவிட் 19 தொற்றுக்கள் உள்நாட்டுக்குள் பரவியிருப்பதால் சீன அரசு வேகமாகச் செயற்பட்டு அவை தொடர்ந்தும் நாட்டுக்குள் பரவாதிருக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *