பிரிட்டன் மருத்துமனைச் சேவைக்காகக் காத்திருக்கிறவர்கள் தொகை 5.3 மில்லியன், என்கிறார் அமைச்சர்.

கொவிட் 19 தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளின் சேவைகள் பெரும்பாலும் அந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதிலேயே இருந்தது. தவிர மருத்துவமனைகளே கொரோனாத் தொற்றுக்களின் ஒரு முக்கிய மையங்களாகவும் இருந்ததால் தமது மற்றைய சுகவீனங்களுக்காக மருத்துவமனையை நாடாமல் தவிர்த்தார்கள் சுமார் 7 மில்லியன் பேர்.

வழக்கமாகத் தமது சுகவீனங்களுக்காக மருத்துவ சேவையை நாடாதவர்கள் இப்போது மீண்டும் ஐக்கிய ராச்சியத்தின் மருத்துவ சேவையை நாடத் தொடங்கியிருப்பதால் அச்சேவைக்கான காத்திருப்புக் காலம் நீண்டுகொண்டே போகிறது. அதே போலவே காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் நீண்டுபோய் தற்போது அதிர்ச்சியூட்டும் 5.3 மில்லியன் ஆகியிருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சஜித் ஜாவிட்.

அந்த அதிர்ச்சியை ஜீரணிப்பதற்கு முன்னரே வரும் மாதங்களில் மருத்துவ சேவை திணைக்களத்தின் கணிப்பீடுகளின்படி 13 மில்லியன் பிரிட்டர்கள் ஏதாவது ஒரு மருத்துவ சேவைக்காகக் காத்திருக்கும் நிலை உண்டாகும் என்கிறார் அவர். அந்த நிலையை முடிந்தளவு சுமுகமாகக் கையாள்வதே தனக்கு முன்னாலிருக்கும் முக்கிய சவால் என்கிறார் அவர். எப்படிப் பார்த்தாலும் பிரிட்டனின் மருத்துவ சேவையின் நிலைமை பெரும் கடினமான ஒரு நிலையை எதிர்நோக்கிக் கையாண்ட பின்னரே மெதுவாகச் சுமுக நிலையைப் படிப்படியாக எட்ட முடியும் என்பதே அவரது கருத்து.

தற்போதுள்ளது போன்ற ஒரு இக்கட்டான நிலைமையை பிரிட்டனின் அரச மருத்துவ சேவை 2007 க்குப் பின்னர் இதுவரை எதிர்கொண்டதில்லை. இப்படியான நிலைமை கட்டாயம் ஏற்படும் என்று இருதய மருத்துவர்கள், புற்று நோய் மருத்துவர்கள், பக்கவாத மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *