ஈரானுடனான முக்கிய எல்லை நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தலிபான்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்க இராணுவம், விமானப்படையெல்லாம் ஒவ்வொன்றாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன. நாட்டோ அமைப்பின் கூட்டுப் படைகளும் அதைத் தொடர்ந்தன. அவர்களின் பாதுகாப்பு வலைக்குள் தங்கியிருந்த வெவ்வேறு நாடுகளும் ஒவ்வொன்றாகத் தமது முக்கிய உத்தியோகத்தினரை ஆப்கானிலிருக்கும் தத்தம் தூதுவராலயங்கள், தொடர்பு உத்தியோக மையங்களிலிருந்து திருப்பியெடுத்து வருகிறார்கள்.

https://vetrinadai.com/news/us-left-bagram-kohistani/

கத்தாரில் வைத்து அமெரிக்காவுடன் உண்டாக்கிக்கொண்ட ஒப்பந்தப்படி அடுத்த மாதத்துக்குள் அங்கிருக்கும் துருப்புக்களை அகற்றிவிட அமெரிக்கா முடிவெடுத்திருந்தது. அதை, நேர அட்டவணைக்கு முன்னரே நிறைவேற்றியும் விட்டது. அதை எதிர்பார்த்து ஓரிரு மாதங்களாகவே தலிபான் இயக்கத்தினர்கள் ஆப்கானிஸ்தானில் தாம் பலமாக இருக்கும் பிராந்தியங்களைக் கைப்பற்றி வருகிறார்கள். அவர்கள் வரமுன்னரே பயத்தில் ஓடித் தப்பிவிடுகிறார்கள் ஆப்கானிய அரச இராணுவத்தினர்.

https://vetrinadai.com/news/afganistan-india-relations/

துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளும் அதே போலவே இருக்கின்றன. ரஷ்யாவுடன் அதுபற்றி ஆலோசிக்க அங்கே விஜயம் செய்திருந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர். அந்த ஆலோசனை நடந்துகொண்டிருக்கும்போது கந்தகாரிலிருந்து அவர்களுடைய தூதுவராலைய உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினரும் பிரத்தியேக விமானம் மூலம் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

”ஆப்கானிஸ்தானின் நிலைமை ஸ்திரமடையும்வரை காத்திருப்போம். எங்கள் கந்தஹார், மாஸர் – ஏ- ஷெரிப் தூதரகங்கள் தொடர்ந்தும் திறந்தே இருக்கின்றன,” என்கிறது இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை.

அதே சமயத்தில் “ஈரானுடனான அதி முக்கிய எல்லைப் பாதுகாப்பு மையமான இஸ்லாம் காலா எங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உடனடியாக அங்கே மீண்டும் சகஜ நிலைமை கொண்டுவரப்படும்,” என்று தலிபான் இயக்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள். 

கடந்த மாதம் தலிபான்கள் தாஜிக்கிஸ்தானுடனான ஆப்கானிஸ்தான் எல்லையைக் கைப்பற்றியிருந்தார்கள். அவர்களை எதிர்த்து நின்ற ஆப்கான் இராணுவத்தினருடன் கடும் மோதல் நடந்தது. அதில் நின்றுபிடிக்க முடியாத ஆப்கான் இராணுவத்தினர் தாஜிக்கிஸ்தானுக்குள் ஓடிப்போய் தஞ்சம் புகுந்தார்கள்.

இஸ்லாம் காலா என்ற ஈரானுடனான எல்லைதான் ஆப்கான் அரசின் மிக முக்கிய வர்த்தகப் பரிமாற்ற எல்லையாகும். ஈரானுடனான அவர்களுடைய வர்த்தகப் போக்குவரத்துக்கள் அதனூடாக நடைபெற்று வருகின்றன. அதைக் கைப்பற்றுவதன் மூலம் காபுல் அரசின் பொருளாதாரத்துக்கு ஒரு பலமான அடி விழுந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *