முதலாவது டுவீட் 2.9 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
டுவிட்டர் நிறுவனத்தை ஆரம்பித்த ஜக் டோர்ஸி 2006 மார்ச் 21 ம் திகதி ”just setting up my twttr” என்ற டுவீட்டை அனுப்பி இன்று உலகெங்கும் பிரபலமாக இருந்து அந்த ஊடகத்தை அறிமுகம் செய்தார். அதை Valuables என்ற ஏல நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்தது.
டிஜிடல் தொழில்நுட்பத்திலான டுவிட்டரின் முதலாவது டுவிட்டின் சான்றிதழையே இந்த நிறுவனம் ஏலத்தில் விட்டது. ஒரு டுவீட்டை காகிதத்தில் எத்தனை பிரதிகளும் எடுக்கலாம். ஆயினும் பிரத்தியேகமாக அந்த சான்றிதழை வாங்கியவர் விரும்பினால் அதை எதிர்காலத்தில் விற்கலாம்.
சாதாரணமாக கலைப்பொருட்களை வாங்கி விற்பதுபோலவே டிஜிடல் படைப்புக்களையும் விற்கும் ஒரு சந்தை இருப்பது இதன் மூலம் பிரபலமாகியிருக்கிறது. இன்று டிஜிடல் தொழில்நுட்பம் மூலம் பாடல்கள், இசை மற்றும் பற்பல தயாரிப்புக்களும் உண்டாக்கப்படுகின்றன. அவைகளையும் விற்பதற்கான சந்தை இதன் மூலம் உருவாகலாம்.
சமீபத்தில் தனது பாடலொன்றை வெளியிட்ட கிங் ஆப் லியோன் இசைக்குழு அதை non-fungible token (NFT) என்ற டிஜிடல் மாத்திரைகள் மூலம் வெளியிட்டது. இந்த முறையில் உலகில் கலைப்படைப்பொன்றை வெளியிடும் முதலாவது இசைக்குழு அதுதான். முதலிரண்டு வாரங்களில் அதன் விலை சுமார் 50 டொலராக இருந்தது. இந்த முறை மூலம் இசையை மட்டுமன்றி வெவ்வேறு டிஜிடல் கலைத்தயாரிப்புக்களையும் வெளியிடலாம். அதன் ஒவ்வொரு மாத்திரையும் தனித்தன்மை கொண்டது, ஒன்றுடனொன்று மாற்றமுடியாதது. ஜக் டோர்ஸியின் முதலாவது டுவீட்டுக்கான உரிமையை வாங்கியவருக்கு மட்டுமே அது சொந்தம் என்பது போலவே non-fungible token (NFT) படைப்பொன்றை வாங்கியவரும் குறிப்பிட்ட அந்த மாத்திரைக்கு உரிமையாளராகிறார்.
இசைத்தட்டுக்கள், கலைப்பொருட்களை வாங்கியவர்கள் ஒவ்வொருவரும் அதற்கு உரிமை கொண்டாடினார்கள். தற்போது டிஜிடல் முறையில் பொருட்கள் எல்லோருக்கும் வெவ்வேறு தளங்களில் கடைத்தாலும் ஒரு சாரார் கலைப்படைப்புக்களுக்குச் சொந்தம் ஆக விரும்புகிறார்கள், தாம் விரும்பும் கலைஞரை ஊக்குவிக்க விரும்புகிறார்கள். அதன் விளைவே இப்படியான டிஜிடல் உரிமை மாத்திரைகள் என்று கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்