பிரிட்டிஷ் ஏற்றுமதி களைநாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள்!
பிரிட்டனில் தயாரிக்கப்படுகின்ற ஒரு கொடிய விவசாய நச்சுக் களைகொல்லி மருந்தின் ஏற்றுமதி காரணமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஜரோப்பாவில் தடைசெய்யப்பட்ட இந்தக்களை கொல்லி மருந்தை தொடர்ந்தும் அதன் பாதிப்புக்களைக் கணக்கில் எடுக்காமல் விற்பனை செய்து ஆதாயம் தேடும் நோக்கில் செயற்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.
பிட்டனின் “சனல் 4” தொலைக்காட்சியே ஆதாரங்களுடன் இவ்வாறு ஒரு குற்றச் சாட்டை வெளியிட்டிருக்கிறது.
“கிராமக்சோன்” (Gramoxone) எனப்படுகின்ற மலிவான நச்சுக் களைநாசனி கடந்த பல தசாப்தங்களாக உலகெங்கும் விவசாயிகளால் விளை நிலங்களில் களைகளை அழித்து உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘சின்ஜென்ரா’ குழுமம் (Syngenta Group) என்னும் சர்வதேச விவசாய விஞ்ஞான, தொழில்நுட்பப் பொருள் உற்பத்தி நிறுவனமே அதனைத் தயாரித்து சந்தைப்படுத்துகின்றது. அதன் தொழிற்சாலைகள் சுவிஸ் நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு உலகெங்கும் இயங்கிவருகின்றன.
‘சின்ஜென்ரா’ நிறுவனத்தின் பிரிட்டிஷ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்ற ‘கிராமக்சோன்” (Gramoxone) களைநாசனி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றது என்பதற்கான ஆதாரங்களை ‘சனல்4’ தொலைக்காட்சி ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது.
‘சின்ஜென்ரா’ குழும நிறுவனம் அதன் கொடிய நச்சு மருந்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை நிரூபிப்பதற்காகப் போலியான தரவுகளைக் காட்டி உள்ளது என்றும் அதற்கான ரகசிய ஆவணங்கள் சிக்கிஉள்ளன எனவும் “சனல் 4” தெரிவிக் கிறது. ஆனால் அதனை ‘சின்ஜென்ரா (Syngenta) நிறுவனம் மறுத்துள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் ஆயிரக் கணக்கான இளவயதினரது தற்கொலை முயற்சிகளுக்குப் பெரிதும் இந்த நச்சுத் திராவகமே காரணம் என்று கூறப்படு கிறது. தற்கொலை, தவறுதலாக அருந்து தல், குடி தண்ணீரில் கலத்தல், உணவுப் பொருள்களுடன் சேர்த்து உட்கொள்ளு தல், சுவாசித்தல் போன்ற வழிகளில் ஏற்படுகின்ற மரணங்களுக்கும், ஆபத்தான வேறுநோய்களுக்கும் “கிராமக்சோன்” பொறுப்பாக உள்ளது என்று “சனல் 4” தொலைக்காட்சி கூறுகி றது.
கிராமக்சோனில் உள்ள மூலப் பொருள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. உயிராபத்தையும் சூழல் பாதிப்புகளை
யும் ஏற்படுத்தக்கூடிய” கிராமக்சோன்” பாவனை பிரிட்டனிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வறிய நாடுகளிலும், வளர்முக நாடுகளிலும் விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்துவது தொடர்கிறது.
“பரகுவாட்” (paraquat) என்னும் பழைய பெயரைக்கொண்ட “கிராமக்சோன்” (Gramoxone) பார்கின்சன் (Parkinson’s disease) என்கின்ற பாரிசவாத நோய்க்கு மூலகாரணமாக உள்ளது என்று சில அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.