திகிராய் மாநிலத்திலிருந்து எரித்திரியாவின் இராணுவம் வெளியேறும் என்கிறார் எத்தியோப்பியப் பிரதமர்.
கடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு அடங்க மறுத்த சுயாட்சி மாநிலமான திகிராய் மீது எத்தியோப்பியாவின் இராணுவத்தை ஏவினார் 2019 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற பிரதமர் அபிய் அஹ்மத். அங்கே ஆளும் கட்சியாக இருந்த Tigray People’s Liberation Front கட்சியினரை அழிப்பதும் அதன் மூலம் நீண்ட காலமாகவே எத்தியோப்பியாவில் பலமான பொருளாதாரத்தைக் கொண்டிருந்த அவர்களை அடக்கியாளவுமே அபிய் அஹ்மத் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
தனது நோக்கத்துக்கு உதவி செய்வதற்காக அபிய் அஹ்மத் திகிராய் மாநிலத்தின் எல்லையிலிருக்கும் எரித்திரியாவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டார். திகிராய் மாநிலத்துடன் ஒத்துப் போகாத எரித்திரியா தனது இராணுவத்தையும் திகிராய் மாநிலத்துக்குள் அனுப்பியது.
நவம்பர் மாதத்திலில் இராணுவத் தாக்குதல் ஆரம்பித்த காலமுதல் திகிராய் மாநிலம் வெளியுலகுக்கு முழுவதுமாக மூடப்பட்டது. எவரும் உள்ளே போகவே, வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் தொலைபேசித் தொடர்புகளும், இணையத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அந்தப் பிரதேசத்தினுள் எத்தியோப்பிய இராணுவமும், எரித்திரிய இராணுவமும் சேர்ந்து நடாத்திய அட்டூழியங்கள் படிப்படியாக வெளியே கசிய ஆரம்பித்தன.
கூட்டுக் கொலைகள், திட்டமிட்ட கற்பழிப்புக்கள், வன்முறைகள், சித்திரவதைகள், முற்றாக அழிக்கப்பட்ட கிராமங்கள் போன்றவை பலராலும் வெளிப்படுத்தப்படவே வேறு வழியின்றி பிரதமர் அபிய் அஹ்மது எரித்திரியாவின் இராணுவத்தின் உள் நுழைவு, எத்தியோப்பிய இராணுவத்தின் மிலேச்சத்தனங்கள் போன்றவைகளை ஒத்துக்கொள்கிறார்.
நீண்டகாலமாக எத்தியோப்பியாவுக்குள் புரையோடியிருந்த உள்நாட்டுப் போர்களைப் பேச்சுவார்த்தைகள், அதிகாரப் பகிர்வுகள் மூலம் ஓரளவு தீர்த்துவைத்ததால் சர்வதேச ரீதியில் மதிப்புப் பெற்றிருந்த அபிய் அஹ்மத் மீது சர்வதேசம் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. திகிராய் மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறும் அவர் மீது கடும் அரசியல் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை சகலத்தையும் மறுத்துவந்த அபிய் அஹ்மத் அவரது இராணுவம் செய்ததாக முன்வைக்கப்பட்டு வரும் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை ஒரு வாரமாக ஒப்புக்கொண்டு அவைகளைச் செய்தவர்கள் மீது விசாரணைகள் நடாத்தப்படும் என்கிறார். அத்துடன் எரித்திரியாவின் இராணுவம் திகிராயிலிருந்து வெளியேற்றப்படுமென்றும் உறுதி கொடுத்திருக்கிறார்.
ஆனால், எரித்திரியாவிடமிருந்து அதுபற்றிய எவ்வித சலனமுமில்லை. எனவே, அபிய் அஹ்மதின் உறுதிமொழிபற்றிய சந்தேகம் தொடர்ந்தும் சர்வதேச அரசியல் தலைவர்களிடையே நிலவுகிறது.
அத்துடன் முதல் தடவையாக ஐ.நா-வின் அகதிகள் உதவி அமைப்பு திகிராய் மாநிலத்தினுள் நுழைந்து அங்கே எரித்திரியாவின் சர்வாதிகாரியிடமிருந்து தப்பியோடி வந்து தங்கியிருந்த எரித்திரியர்கள் வாழ்ந்த அகதிகள் முகாம்கள் இரண்டை அடைந்தது. ஆனால், அவை முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தன.
தப்பியோடிய எரித்திரியர்களுக்கு உதவியதாலும் கூட திகிராய் மாநிலத்தினர் மீது எரித்திரியா கடும் கோபத்துடனிருந்தது. அந்த முகாம்களிலிருந்த அகதிகளை எரித்திரிய இராணுவம் கொடுமைப்படுத்திச் சித்திரவதைகள் செய்து, ஒரு பாலாரைத் திரும்பவும் கைது செய்து எரித்திரியாவுக்குள் கொண்டு சென்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்