தேவாலயங்களைத் தவிர்ந்த மற்றைய இடங்களையெல்லாம் பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தும் போலந்து.
“கடந்த 13 மாதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. படுவேகமாகப் பரவிவரும் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் மக்கள் நடமாட்டங்களைக் கடுமையாகத் தடுக்கவேண்டும்,” என்று கூறி இன்று முதல் புதிய கொரோனாக் கட்டுப்பாடுகளை அறிவித்தார் பிரதமர் மத்தேயுஸ் மொரவேஸ்கி.
குழந்தைகள் காப்பகங்கள், ஆரம்பப் பாடசாலைகள், மற்றும் சாதாரணமான கடைகளுட்பட அனைத்தும் மூடப்படவேண்டுமென்ற உத்தரவைப் போட்டிருக்கிறது போலந்து அரசு. கத்தோலிக்க திருச்சபையின் கை ஓங்கியிருக்கும் போலந்தில் அவைகளைப் பூட்ட உத்தரவு போடப்படவில்லை. பெரும் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கும் போலந்தின் மருத்துவ சேவையின் இயக்கம் முறிவடைந்துவிடலாகாது என்ற நோக்கிலேயே புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
“எங்கள் சிறு பிள்ளைகள் சக நண்பர்களுடன் விளையாட முடியாது. ஆனால், தேவாலயத்துக்கு மட்டும் போகவேண்டுமா? அப்படியானால் வேலைக்குப் போகும் பெற்றோர்களின் பிள்ளைகளை அவர்களே கவனித்துக்கொள்ளலாமே!” என்று கேட்கிறார்கள் பல பெற்றோர்.
சுமார் 38 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போலந்தில் சுமார் 2 மில்லியன் பேருக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் தொகை சுமார் 50,000 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.
கொவிட் 19 தடுப்பு மருந்து போடும் வேகம் போலந்தில் மந்தமாகவே இருக்கிறது. அவைக்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. தடுப்பூசி வரிசைக்குள் பிரபலங்களும், அரசியல்வாதிகள் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் ஆகியோர் நுழைந்துவிட்டதாகப் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.சுமார் 9 விகிதமான போலந்து மக்களுக்கு ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்