கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அரசியல் கோஷங்களாகளாகவும், எதிர்ப்புக்களாகவும் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேசப் பந்தயங்களைச் சில நாடுகள் புறக்கணித்தும் இருக்கின்றன. அதே வழியில் சர்வாதிகார நாடான கத்தாரில் உலகக் கால்பந்தாட்டப் பந்தயத்துக்குப் போவதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.
2022 இல் கத்தார் நடத்தவிருக்கும் சர்வதேசக் கோப்பைக்கான பந்தயங்களுக்காகக் கட்டப்பட்டுவரும் அரங்கங்கள் உட்பட்ட கட்டடங்களில் நாளாந்தம் இறந்து போகும் ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உரிமை, நிலைமை போன்றவை சில வருடங்களாகவே கடும் வெளிச்சத்தின் கீழ் வந்திருக்கிறது. எவ்வித உரிமைகளுமின்றி அடிமாடுகள் போன்று நடாத்தப்படும் அவர்களின் நிலைமையை மேம்படுத்த கத்தார் அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்ற குரல் சர்வதேச அளவில் எழுந்திருக்கிறது.
ஆயினும், கத்தாரில் இருப்பது ஒரு சர்வாதிகார ஆட்சியே என்பதால் அவர்கள் தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அத்துடன் அரசியல் ரீதியாகவும் கத்தாரில் அரச குடும்பத்தினரை எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுவது சாதாரணம்.
கத்தாரில் நடக்கவிருக்கும் கால்பந்துப் போட்டிகளைப் புறக்கணிப்பதை விட அப்போட்டிகளில் பங்குபற்றிக்கொண்டே தமது மனித அபிமானத்தை வெளிப்படுத்துவதும், கத்தாரின் நடத்தையை உலகுக்குக் காட்டுவதும் புத்திசாலித்தனமானது என்று சில நாடுகளின் கால்பந்தாட்ட வீரர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.
இதற்காக சமீபத்தில் நோர்வீஜியக் கால்பந்தாட்ட வீரர்கள் “‘மனித உரிமைகள் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும்” [“Human rights, on and off the pitch”] என்ற கோஷத்தைப் பதித்த மேற்சட்டைகளைத் தாம் விளையாடுவதற்காகத் தயாரித்து வெளிப்படுத்தினார்கள். அடுத்ததாக ஜேர்மனிய வீரர்கள் “மனித உரிமைகள்” என்ற எழுத்துக்களைப் பொறித்த மேற்சட்டைகளை ஒன்றிணைத்து ஐஸ்லாந்துடன் மோதியபோது படமெடுத்திருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்