சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான தொரா புத்தகமொன்றை துருக்கிய பொலீஸ் கைப்பற்றியது.
யாரோ கொடுத்த துப்பின் பேரில் துருக்கிய பொலீசார் இரண்டு கார்களில் போனவர்களை வழிமறித்துச் சோதனையிட்டதில் சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான யூதர்களின் புனித தொரா ஏடு கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தொரா புத்தகத்தின் எழுத்துக்கள் தங்கத்தினால் எழுதப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மொத்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தொரா ஏடு அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகத் துருக்கிய பொலீஸ் அறிவிக்கிறது.
ஒரு யூதர் என்னவெல்லாம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் நடக்கவேண்டுமென்பதைத் தொரா விபரமாகக் குறிப்பிடுகிறது. விசுவாசமுள்ள யூதனின் வாழ்நாள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் என்ன அந்தந்தச் சமயத்தில் அந்த நபர் எப்படியெல்லாம் ஒழுகவேண்டுமென்று குறிப்பிட்டிருக்கும் தொரா வரிகள் யூதர்களுடைய நீதிபதி ஸ்தானத்திலிருக்கின்றன.
சினாய் மலையில் யூதர்களின் ஆரம்பகாலத் தலைவர் கடவுளிடமிருந்து பெற்றதாகக் குறிப்பிடப்படும் சட்டவரிகள் தொராவின் மிகவும் பழமைவாய்ந்தவையாகும். அதன் பின்னர் தொடர்ந்து வந்த யூதச் சட்டங்கள், வாதங்கள், விபரங்களெல்லாம் தொரா வரிகளில் பதியப்படுகின்றன. தற்போதைய காலத்திலும் தொரா சட்டங்கள் விவாதிக்கப்பட்டு அவை எப்படி இந்தக் காலத்தில் அனுசரிக்கப்படவேண்டுமென்ற விபரங்களையும் தொரா வரிகளில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது தொரா என்பது நீண்டுகொண்டே போகும் யூதர்களின் புனிதமான புத்தகம்.
சாள்ஸ் ஜெ. போமன்