பிரிட்டிஷ் பாடசாலை மாணவியர் தாம் தமது சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாகக் குரலெழுப்புகிறார்கள்.
பிரிட்டிஷ் பாடசாலைகளில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் பற்றிப் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவியர் சமீப நாட்களில் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தானே பாதிக்கப்பட்ட ஒரு மாணவி இணையத்தளமொன்றை ஆரம்பித்திருக்கிறார் தனது அனுபவத்தையும் வெளியிட்டு.
சாரா சோமா என்ற 22 வயது பிரிட்டிஷ் மாணவி தனக்கு நடந்த அனுபவங்களைப் பகிர்ந்து ஆரம்பித்த இணையத்தளத்தில் ஏற்கனவே ஏழாயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் தமது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். பிபிசி தொலைக்காட்சியில் தோன்றிய சாரா “பிரிட்டிஷ் பாடசாலைகளில் பாலியல் தொந்தரவுகள் செய்வது சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயமாகிவிட்டது,” என்கிறார்.
மாணவ, மாணவிகளுக்காக ஏற்படுத்தப்படும் விருந்துகள், வைபவங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாவது சாதாரணமாக நடக்கிறது. கைப்பேசி, இணையத்தளங்கள் போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பாவித்துப் பாலியல் தொந்தரவு, பயமுறுத்தல் செய்வதும் வாடிக்கையாகியிருக்கிறது. இப்படியாக ஒரு மாணவ மாணவியைத் தொந்தரவுகளைச் செய்பவர்கள் பெரும்பாலும் அவர்களுடன் சேர்ந்து பழகுபவர்களாகவே இருக்கிறார்கள், போன்ற விபரங்களைத் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களின் வாக்குமூலங்களிலிருந்து காண முடிகிறது.
“Everyone invited” என்ற பெயரில் சாரா சோமா ஆரம்பித்த இணையத்தளத்தில் ஆரம்பத்தில் வந்து தமக்கு நடந்தவற்றைப் பகிர்ந்தவர்கள் பெரும்பாலும் தனியார் பாடசாலை மாணவிகளாகவே இருந்தார்கள். ஆனால், அரச பாடசாலைகளிலிருந்தும் பல மாணவ மாணவிகள் இப்போது தமக்கு நடந்தவற்றை எழுதுகிறார்கள்.
பல தனியார் பாடசாலைகள் நடந்தவைகளைத் தமது “பெயரைக்” காப்பாற்றும் நோக்குடன் மூடி மறைக்க முற்படுகின்றன என்ற விபரமும் வெளியாகியிருக்கிறது.
விபரங்கள் நாட்டையும் கல்விக்கூடங்களையும் உலுப்பியிருக்கின்றன. பல கோணங்களிலிருந்து இதுபற்றி நாட்டின் கல்வித் திணைக்களம் ஒரு ஆராய்வு நடத்தி விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அத்துடன் பிரிட்டிஷ் அரசும் இதுபற்றிக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் குரல் பலமாக எழுந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்