இரத்தபசியில் இருக்கும் பேயின் மாளிகை|Dracula Transylvania பக்கம் வெற்றிநடை உலாத்தல்
ஹங்கேரிய எல்லையை அடுத்து ருமேனியாவின் பாகமாக இருக்கும் பகுதியே டிரான்சில்வேனியா [காடுகளுக்கு அப்பாலுள்ள நாடு] என்றழைக்கப்படுகிறது. இது குறிஞ்சி நிலமாக இருப்பதே இப்பிரதேசம் அழகானது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
கார்பாத்திய மலைத்தொடர்கள் டிரான்சில்வேனியாவின் ஊடாக வளர்ந்து நிற்கின்றன. அந்த மலையாபரணங்களின் அழகூட்டலும் அடர்ந்து படர்ந்திருந்த காடுகளின் மெருகேற்றலும் அப்பிராந்தியத்தின் பிரத்தியேக அழகுக்கு எடுத்துக்காட்டாகும். மலைகளிலிருந்து ஓடும் அருவிகள் அப்பகுதியைச் செழிப்பாக வைத்திருக்கின்றன.
டிரான்சில்வேனியாவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய விடயங்களிலொன்று அங்கிருக்கும் பல அரசர்கள், பிரபுக்களின் மாளிகைகளும் ஆகும். அவைகளிலொன்றான பிராம் அரண்மனையைப் பற்றியே இந்த உலாத்தல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறேன்.
பிரசோவ் நகருக்கு வெளியேயிருக்கும் அந்த அரண்மனையை நான் நாட முக்கிய காரணம் “டிரகூலா” சினிமாக்களின் பாதிப்பு எனலாம். என்னைப்போலவே லட்சக்கணக்கான “டிரகூலா” ஆர்வலர்களை ஈர்க்கும் பிரான் அரண்மனை அழகும், பழமையும் வாய்ந்தது மட்டுமன்றி பிரமாண்டமானதும் கூட. அத்துடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒரு நாளை அதற்காகவே செலவிடவைக்கக்கூடிய விடயங்களைக் கொண்டவை.
“டிரகூலா” என்று பிற்காலத்தில் பற்பல கதைகளால் புனையப்பட்ட விடாட் செப்பேச் உண்மையில் இந்த அரண்மனையில் வாழ்ந்ததில்லை. என்றாலும், அந்தப் பிரபுவின் பிரபலத்தைச் சுற்றுலாத்துறையில் பாவித்து அதன் பலனை அடையும் அதே சமயம் என் போன்ற “டிரகூலா” ஆர்வலர்களின் விருப்பத்துக்கும் தீனி போடுகிறது எனலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்