லெபனானின் அதிநீளமான லித்தனி நதி மாசுபட்டதால் பல தொன் மீன்கள் குப்பைகளுடன் சேர்ந்து மிதக்கின்றன.
சுமார் 140 கி.மீ நீளமுள்ள லித்தனி நதி லெபனானின் விளைநிலங்களுக்கு மிகவும் முக்கியமானது. மத்தியதரைக்கடலில் சென்று விழும் அந்த நதி நாட்டின் மீன் வளத்துக்கும் முக்கியமானதாக இருந்து வருகிறது. #குஜராத் மாநிலத்தின் மருத்துவமனை #தீவிபத்து. அந்த நதியின் வழியிலிருக்கும் கரவுன் குளம் கடுமையாக மாசுபட்டிருப்பதால் கடந்த நாட்களில் அதன் மேற்பரப்பில் சுமார் ஐம்பது தொன் மீன்கள் செத்துப்போய் மிதக்கின்றன.
அந்தக் குளத்தில் குப்பைகளைக் கொட்டுவதுடன், சுற்றிவர உள்ள குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் கழிவு நீரைத் திறந்துவிடுவது வழக்கம். இதுபற்றிப் பல வருடங்களாகவே சூழல் மேம்பாட்டுக்காக இயங்கும் அமைப்புக்கள் எச்சரித்து வந்தாலும் எவரும் காது கொடுப்பதில்லை.
அந்தப் பகுதி நீர்ப்பரப்புக்களுக்கான நிர்வாகம் அந்த மீன்களை உட்கொள்வது ஆபத்தானதென்றும் அவைகளில் நஞ்சு கலந்திருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள். சூழல் மேம்பாட்டு இயக்கங்கள் அந்த நீரை மாசுபடுத்துகிறவர்களைக் கண்டுபிடித்து நடந்திருப்பதற்கான பொறுப்பை ஏற்கவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றன.
பல வருடங்களாகவே ஊழலும், சமயவாதமும், இனவாதமும் கொண்ட அரசியல்வாதிகளால் மோசமாகக் கையாளப்பட்டு செயற்படாத அரசாகியிருக்கிறது லெபனான். நாட்டின் பணமதிப்பு கடுமையாக வீழ்ந்து பொருளாதாரத் துறை படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் இயங்காததால் முடமாகியிருக்கும் இச்சமயத்தில் நிர்வாக ரீதியில் நாசமாகிப் சுற்றுப்புறத்தில் வாழ்பவருக்கு நாற்றமடித்துவரும் இந்தக் குளத்தின் நிலை பற்றி எவராவது நடவடிக்கைகள் எடுப்பார்களா என்பது கேள்விக்குறியே.
சாள்ஸ் ஜெ. போமன்