சிங்கங்களைப் பண்ணைகளில் பிறப்பித்து வளர்க்கும் வியாபாரத்தை ஒழித்துக்கட்டத் தென்னாபிரிக்கா முடிவுசெய்திருக்கிறது.

சிங்கப்பண்ணைகளைச் சட்டபூர்வமாக வைத்திருக்க அனுமதிக்கும் ஒரேயொரு நாடு தென்னாபிரிக்காவாகும். பல நாடுகளும், மிருகங்களைப் பேணும் அமைப்புக்களும் விமர்சித்துவந்த பல மில்லியன்கள் இலாபம் தரும் அந்த வியாபாரத்தைப் படிப்படியாக ஒழித்துக்கட்ட தென்னாபிரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. 

 அங்கே காடுகளில் சுதந்திரமாக வாழும் சுமார் 3,500 சிங்கங்களைத் தவிர சுமார் 12,000 சிங்கங்கள் பண்ணைகளில் அவைகளின் உரிமையாளர்களால் வளர்க்கப்படுகின்றன. பண்ணைகளில் வாழும் அம்மிருகங்களின் எண்ணிக்கை சுமார் 8,000 என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால், மேலும் 4,000 வளர்க்கப்படுவதாக அந்த வியாபாரம் பற்றி நடாத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவருகிறது. 

 ஆடு, மாடு, கோழிகள் போன்றவைகள் போல முதலாளிகளால் பண்ணைகளில் பிறக்கவைத்துக் கூண்டுகளிலோ அல்லது சிறிய அளவு காட்டுப் பகுதிகளிலோ வளர்க்கப்படும் அவைகளின் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிகின்றன. அம்மிருகங்களில் சில உலகின் செல்வந்தர்களுக்கு சுட்டுக் கொல்வதற்காக அனுமதிக்கப்படுகின்றன. ஒரு சிங்கத்தை வேட்டை போன்ற நிகழ்ச்சியொன்றை உருவாக்கிக் கொல்வதற்குச் சுமார் 42,500 பவுண்டுகள் வரை வாங்குகிறார்கள் பண்ணை முதலாளிகள்.

 ஒரு பகுதி சிங்கங்கள் பிறந்தவுடனேயே தாயிமிருந்து பிரிக்கப்பட்டுத் தனியே எடுத்து மனிதர்களால் தடவப்படுவதற்காகப் பழக்கியெடுக்கப்படுகின்றன. மேலும் சில சர்க்கஸ்களில் வித்தைகளுக்காகப் பழக்கப்படுகின்றன. இறக்கும் மிருகங்களின் பாகங்கள் சிலவற்றுக்குச் சீனாவைச் சுற்றிவர உள்ள நாடுகளில் பெரும் மதிப்பு இருக்கிறது. அவை பாரம்பரிய மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவைகளில் பிரத்தியேக சக்திகள் இருப்பதாக நம்பிச் சிலர் உட்கொள்வதுமுண்டு. 

 “இந்தப் பண்ணைகளைப் பற்றியப் பிரத்தியேக ஆராய்வில் தெரியவந்த உண்மைகளை வைத்துப் பார்க்கையில் இத்தொழிலைப் படிப்படியாக, முற்றாக ஒழித்துக்கட்டுவது அவசியம் என்று புரிந்துகொண்டோம்,” என்கிறார் தென்னாபிரிக்காவின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைச்சர் பார்பரா கிரீஸி. தனது அரசு அதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு அறிவிக்கும் என்கிறார் அவர். 

 இப்படியான பண்ணைகள் அழியும் மிருகங்கள் சிலவற்றை எதிர்காலத்துக்குப் பாதுகாக்க உதவும் என்று சிலர் வாதிக்கிறார்கள். ஆனால், இத்தொழிலில் நடக்கும் குரூரமான நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில் அதை ஒழித்துக்கட்டுவதே நல்லது என்று பெரும்பான்மையினர் நம்புகிறார்கள்.

 சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *