போதைவஸ்து பாவனையாளர்கள் வாண வெடிகளால் விரட்டியடிப்பு!பாரிஸ் ஸ்ராலின் கிராட்டில் சம்பவம்.

நள்ளிரவில் வீதிகளில் கூடி போதைப் பொருள் மற்றும் மது அருந்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர் மீது குடியிருப்பாளர்கள் வாண வெடிகளைச் செலுத்தி விரட்டி அடித்துள்ளனர்.

தொடர்ந்து இரவில் கூடி தொல்லை தருவோரைக் கட்டுப்படுத்த பொலீஸார்தவறியதால் விரக்தியடைந்த சில குடியிருப்பாளர்களே இவ்வாறு சட்டத்தை தம்கையில் எடுத்து இந்தச் செயலைப் புரிந்துள்ளனர் என்று தெரிவிக்கப் படுகிறது.

பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற லா-சப்பேல் அருகே ஸ்ராலின்கிராட் (Stalingrad)பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அங்குள்ள சில தெருக்களில் நீண்டகாலமாக இரவு நேரத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை யில் ஈடுபடுவோரது அட்டகாசங்கள்அதிகரித்திருந்தன. அது குறித்து அங்கு வசிப்போர் பொலீஸ் தலைமையகத் துக்கு பல முறை முறையிட்டு வந்தனர்.

பொலீஸார் அவ்வப்போது நடவடிக்கை களை எடுத்து வந்த போதிலும் போதைக்கும்பல்கள் இரவில் போடும் ரகளைகள் குறையவில்லை. நீண்டகாலமாக போதைப் பொருள்களை விற்போர் அந்தப் பகுதியைத் தங்கள் வாடிக்கைப் பிரதேசமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரவில் சத்தங்களையும் அடிபிடிகளையும் பொறுக்க முடியாத அப்பகுதி குடியிருப்பாளர்கள் சிலரே வெடிகள் மற்றும் வாண வெடிக்களை ஏவுவதற்குப் பயன்படுத்துகின்ற மோட்டார்களைத் (fireworks mortars) தயார் செய்து அவற்றைக் கொண்டு எதிர்பாராத சமயத்தில் தாக்குதல் நடத்தி போதைக் கும்பல்களை விரட்டியடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இரவு நேரம் வாண வெடியோசைகளால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அந்தக் காட்சிகளை படம்பிடித்த சிலர் அவற்றை சமூகவலைத் தளங்களில் வெளியி ட்டனர். அதேசமயம் ஆபத்தான வெடிப் பொருள்களால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான அத் தாக்குதலைப் பிரதேசவாசிகள் சிலர் கண்டித்துமுள்ளனர்.

நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் நகரம் எங்கும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொலீஸாரின் நடவடிக்கைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என்று அவதானிகள் கூறுகின்றனர். அது நகரப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வெள்ளி, சனி இரவுகளில் அப்பகுதி குடியிருப்பாளர்கள் சிலர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியைத் தம் கைகளில் எடுத்தனரா என்பது குறித்து பாரிஸ் சட்டவாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொதுவாகப் பாரிஸின் புறநகர் பகுதிகளில் போதைவஸ்து கடத்தல் கும்பல்கள் பொலீஸாருடன் முரண்பட்டுக்கொண்டு பொலீஸ் நிலையங்கள் மீது இவ்வாறு வாண வெடித் தாக்குதல்களை நடத்துவதுண்டு. ஆனால் இந்த முறை நகரப் பகுதியில் போதைப் பொருள் கும்பல்களுக்கு எதிராகப் பொதுமக்கள் அந்த “ஆயுதத்தைப்” பயன்படுத்தி உள்ளனர்.

அதேவேளை நேற்றிரவு பெரும் எண்ணிக்கையான பொலீஸார் ஸ்ராலின் கிராட் பகுதியில்குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப் பட்டன. தேவையின்றி வீதிகளில் நடமாடியோரிடம் அடையாள அட்டைகள் சோனையிடப்பட்டன.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *