கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு தலைக்கு 25 எவ்ரோ வழங்குவதாக அறிவித்தது செர்பியா.
தனது நாட்டு மக்களில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 எவ்ரோக்கள் தருவதாக உலகின் முதலாவது நாடாக அறிவித்திருக்கிறது செர்பியா. பதினாறு வயதுக்கு மேற்பட்ட செர்பியர்கள் இதுவரை தடுப்பூசிகளைப் போட்டிருப்பின் அல்லது மே 31 க்கு முதல் ஒரு தடுப்பூசியையாவது பெற்றுக்கொள்வார்களானால் அவர்களுக்கு செர்பியா 3,000 செர்பிய டினார்களை வழங்கும்.
“தனது நாட்டின் நலன் மீது கரிசனை கொண்டுள்ளவர்களுக்கு அவர்களை உற்சாகப்படுத்திக் கைமாறு வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று நாட்டின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வூசிச் குறிப்பிடுகிறார். அத்தொகை சராசரி செர்பியரின் மாத வருமானத்தில் 5 விகிதமாகும்.
தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ள மறுப்பது பொறுப்பற்ற ஒரு சுயநல நடத்தையாகும் என்று விமர்சிக்கும் ஜனாதிபதி, கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் எதையும் எடுக்கப் போவதில்லை என்கிறார். தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள மறுப்பவர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுப்பின் அவருக்கு அந்த நாட்களுக்கான விடுமுறைச் சம்பளம் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 7 மில்லியன் மக்கள் தொகையுள்ள செர்பியாவில் இதுவரை 1.5 மில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டு விட்டன. ஆரம்பத்தில் வேகமாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட செர்பர்கள் அதன்பின் தயங்குவதாகத் தெரிகிறது. சினோபார்ம், அஸ்ரா செனகா, பைசர் மற்றும் ஸ்புட்நிக் V ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை செர்பியா பாவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்