தீவிரவாதம், ஒழுங்கு மீறல்களில் ஈடுபட்டால் அகதி உரிமை பறிப்பு வெளிநாட்டவருக்கு எச்சரிக்கை.
தீவிரவாதச் செயல்கள், பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்ற வெளிநாட்டவர்களது புகலிடப் பாதுகாப்பு பறிக்கப்பட்டு அத்தகையோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா (Gérald Darmanin)இவ்வாறு எச்சரித்திருக்கிறார்.
வெளிநாட்டு அகதிகளைப் பொறுத்தவரை “அவர்கள் யார் என்று பார்க்காமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தீர்ப்பளிக்கப்படும். பிரான்ஸின் தெளிவான கொள்கை நிலைப்பாடு இதுவே ஆகும்”என்றும் அவர் நினைவூட்டி உள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்துக்களை’Le Figaro’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் வெளிநாட்டவர்களது தஞ்சப் பாதுகாப்பை (asylum protections) மீளப்பெறுகின்ற 147 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடானவகையில் உள்ள ஆயிரத்து 83 வெளி நாட்டவர்கள் எச்சரிக்கைக் கோவைகளில்(file of alerts) சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 587 பேர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் ஆகக் கூடிய எண்ணிக்கையாக 200 பேரது வதிவிட உரிமை பறிக்கப்பட்டுள்ளது. கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற வெளிநாட்டினருக்கு பிரான்ஸில் இடம் இல்லை என்ற அதிபரது நிலைப்பாட்டின்படி நாங்கள் இவற்றைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம். -இவ்வாறு உள்துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.