செவ்வாய்க் கிரகத்துக்கும் துருக்கியின் குளமொன்றுக்கும் எர்டகானுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

துருக்கியிலிருக்கும் சல்டா குளம் நாஸாவின் பெர்ஸிவரென்ஸ் செவ்வாய்க் கப்பல் பயணம் திட்டமிடப்பட்டபோது சர்வதேசப் பிரபலம் பெற்றது. வெள்ளை குளக்கரையைக் கொண்ட சல்டா குளத்தைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்திலிருக்கும் பல தாவர, விலங்குகள் பல உலகில் வேறெங்கும் இல்லாதவை. அதேபோலவே அங்கிருக்கும் சில கனிப்பொருட்களும் தனித்தன்மை வாய்ந்தவை. துருக்கியின் தென்மேற்கிலிருக்கும் அக்குளம் துருக்கியர்களின் சுற்றுலா தலமாக இருந்தது. 

 சல்டா குளம் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நாஸா விஞ்ஞானிகள், புவியியல் ஆராய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததுபோலவே நாட்டின் ஜனாதிபதி எர்டகானின் கவனத்தையும் கவர்ந்தது, வெவ்வேறு காரணங்களுக்காக. ஆனால், இரண்டு வகையிலும் அது சர்வதேசத்தின் கவனத்தை ஊடகங்கள் மூலமாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதால் எதிர்காலத்தில் பல மடங்கு அதிகமான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கலாம். அது அந்தக் குளத்தின் தனித்தன்மைக்கே ஆபத்தாக அமையலாமென்று கருதுகிறார்கள் அக்குளத்தின் மீது அதீத கவனம் கொண்டிருக்கும் சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

செவ்வாய் கிரகத்தில் தற்போது இறங்கி ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருக்கும் பெர்ஸிவரென்ஸ் கொண்டுசென்றிருக்கும் ஆராய்ச்சி வாகனமான ரோவர் அங்கே ஜெஸேரோ என்ற பள்ளத்தாக்கில் நகர்ந்து அங்கிருக்கும் நிலப்பகுதி பற்றி நாஸாவுக்கு விபரங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. 

ஜெஸேரோ பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் ஒரு குளமாக இருந்து வரண்டு போயிருக்கலாமென்பது விஞ்ஞானிகளின் அனுமானம். அந்தக் குளம் துருக்கியின் சல்டா குளம் போன்ற ஒரு புவியியல் தனித்தன்மையைக் கொண்டிருந்திருக்கவேண்டும் என்பதும் அதனால் சல்டா குளப் பிரதேசத்திலிருக்கும் புவியியல் அமைப்பும், சில கனிமப் பொருட்களும் ஜெஸேரோப் பள்ளத்தாக்கிலும் இருக்கலாம் என்று அவ்விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதனால் செவ்வாயில் விண்கலம் இறங்கியதும் நாஸா வெளியிட்ட படங்களில் சல்டா குளம் ஒரு ஒப்பீடாகப் பிரசுரிக்கப்பட்டுப் பிரபலமடைந்திருக்கிறது.

https://vetrinadai.com/news/jezero-crater-mars/

துருக்கியின் ஜனாதிபதி நாட்டில் தனது பெயரைக் குறிப்பிடக்கூடிய விதம் விதமான பெரிய திட்டங்களை உண்டாக்குவதில் ஆர்வமுள்ளவர். தனது பெயர் எதிர்காலத்தில் நிலைத்திருக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் நெடுஞ்சாலைகள், பூங்காக்கள், வியாபார நகரங்கள் போன்றவைகளை நாடெங்கும் கட்டி வருகிறார்.

 நாட்டுமக்களுக்காகப் பச்சைப்பசேலென்ற இடங்களைக் கட்டுவதற்காக அவர் சல்டா கடற்கரைப் பிராந்தியத்தையும் தெரிவுசெய்திருக்கிறார். அங்கிருக்கும் வெள்ளை மணலை வெவ்வேறு பாகங்களுக்கு அகற்றி வருவதும் அதில் ஒரு பகுதியாகும். பதிலாக அந்தக் குளத்தைச் சுற்றிப் பல மரங்களை நட்டு அங்கே பல்லாயிரக்கணக்கானோர் விஜயம் செய்யக்கூடிய தலமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

 நாஸாவின் செவ்வாய் – ஒப்பீடும், எர்டகானின் பச்சைப்பசேலென்ற சுற்றுலா தலத் திட்டங்களும் சேர்ந்து சல்டா குளத்தின் தனித்தன்மையை முழுசாக மாற்றிவிடுமென்ற நிலை உண்டாகியிருக்கிறது. அந்தக் குளம் தன்னையடுத்திருக்கும் பிராந்தியத்தின் புவியியல் சூழலை மட்டும் பயன்படுத்தியே தன் தனித்தன்மையை உருவாக்கியிருக்கிறது. அங்கே வேறு விதமான தாவரங்களை நட்டு, அதன் அமைப்பையே மாற்றினால் எதிர்காலத்தில் அப்பிரதேசம் படிப்படியாகத் தனது தனித்தன்மையை இழந்துவிடுமென்று சூழல் அமைப்புக்கள் விசனத்துடன் எச்சரிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *