ஆபிரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பச்சைத் தங்க விவசாயம் அனுகூலமாக இருக்குமா?
உலகச் சந்தையில் படுவேகமாக விற்பனையை அதிகரித்துவரும் அவகாடோபட்டர்புருட் பழங்கள் அதன் விலை மதிப்பால் பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. 1990 முதல் 2017 வரை ஒரு அமெரிக்கரின் அவகாடோ கொள்வனவு 406 விகிதத்தால் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. அதனால் அவைகளை ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ள ஆபிரிக்க நாடுகள் போட்டி போடுகின்றன.
அவகாடோப் பழங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் முதல் பத்து நாடுகளில் கென்யா ஏற்கனவே இடம் பிடித்திருக்கிறது. 2019 – 2020 காலப்பகுதியில் அதன் அவகாடோ ஏற்றுமதி வருமானம் சுமார் 30 % ஆல் அதிகரித்திருக்கிறது. நைஜீரியா, உகண்டா ஆகிய இரண்டு நாடுகளும் அடுத்து வரவிருக்கும் வருடங்களில் தமது அவகாடோ விவசாயத்தைப் பெருமளவில் அதிகரிக்கவிருக்கின்றன.
ஆபிரிக்க நாடுகளின் இந்தப் பச்சைத் தங்கத்தின் மீதான வேட்டை பற்றிய சில விசனங்களும் எழாமலில்லை. அதற்குத் தேவையான நீரை எடுக்கும்போது மற்றைய விவசாயங்கள் பாதிக்கப்படலாம். பெருமளவில் அதையே நாடெங்கும் பயிரிட ஆரம்பிப்பதால் நாட்டிலிருக்கும் தாவரங்களில் மற்றைய தாவரங்கள் அழிக்கப்படலாம்.
தென்னமெரிக்காவிலிருக்கும் மெக்ஸிகோ, சிலே போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையை ஆக்கிரமிப்பதற்கான ஆர்வத்தில் அவகாடோ விவசாயத்தைப் பெருமளவில் அதிகரித்தன. விளைவாக நாட்டின் நீர் வளம் பாதிக்கப்பட்டு வேறு வித சூழல் பாதிப்புக்களுக்கும் ஆளாயின என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
ஆனால், ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை அவகாடோ விளைவிக்கப்படும் காலமும், அது விளைவிக்கப்படும் பகுதியின் மழைக்காலமும் அவ்விவசாயத்துக்குச் சாதகமாகவே இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவகாடோப் பழங்கள் ஒரு கிலோவை விளைவிக்க சுமார் 2,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. தற்போதைய நிலைமையில் பழங்கள் விளையும் பிரதேசங்களில் மழைக்காலம் அதற்கேற்றபடி ஒத்துவருவதாகவே தெரிகிறது.
கோப்பித் தோட்டங்களைப் பெருமளவில் அதிகப்படுத்திச் சர்வதேசச் சந்தையில் அதன் விலை வீழ்ச்சியால் ஆபிரிக்க நாடுகள் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதை ஈடுசெய்ய இந்தப் பச்சைத் தங்க விவசாயம் கடவுளால் அனுப்பப்பட்டிருப்பதாக ஆபிரிக்க அரசியல் தலைவர்கள் சிலர் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்