இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட துருக்மேனிஸ்தான் இராணுவத்தினர் தாம் பெறும் பதக்கங்களுக்காகக் கட்டணம் செலுத்தவேண்டும்.
ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா உட்பட்ட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் மே 9 திகதியன்று தாம் நாஸி ஜேர்மனிக்கெதிராக இரண்டாம் உலகப் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகின்றன. துருக்மேனிஸ்தானிலும் அவ்விழா அப்போரில் பங்குபற்றிய இராணுவத்தினருக்குப் பதக்கங்கள், பரிசுகள் கொடுத்துக் கொண்டாடப்படுகிறது.
அப்பரிசுகளுக்காகவும், பதக்கங்களுக்காகவும் செலவிடப்படும் தொகையை அவற்றைப் பெற்றுக்கொள்ளும் துருக்மேனிஸ்தானின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் கொடுக்கவேண்டுமென்று அந்த நாட்டின் ஜனாதிபதி குர்பான்குலி பெர்டிமுகமதேவ் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த வருடம் நாஸி ஜேர்மனிக்கெதிரான வெற்றியின் 75 வது விழாவைக் கொண்டாடியபோது கொடுக்கப்பட்ட பரிசுகளுக்காகவும் பின்னர் அவர்களிடமிருந்து கட்டணம் அறவிடப்பட்டதாகத் தெரியவருகிறது. இவ்வருடம் அவர்கள் பெறும் பரிசுகளுக்கான தொகை என்னவென்று பின்னர் அறிவிக்கப்படும்.
2020 ம் ஆண்டுக்கு முன்னர் அந்த இராணுவ வீரர்களுக்கு நன்றியாக வருடாவருடம் இத்தினத்தில் சுமார் 55 டொலர் கொடுக்கப்பட்டு வந்தது. ரஷ்யா இவ்வாரத்தில் தனது இரண்டாம் உலகப் போர் இராணுவ வீரர்களுக்கு 135 டொலர்களைக் கொடுக்கும். பக்கத்து நாடுகளான உஸ்பெக்கிஸ்தான் தனது இரண்டாம் உலகப் போர் வீரர்களுக்குத் தலா 950 டொலரையும், கஸக்ஸ்தான் 2,350 டொலர்களையும் கொடுக்கிறது.
உலகின் நாலாவது அதிகமான இயற்கை வாயு வளங்களைக் கொண்ட நாடு துருக்மேனிஸ்தான். ஆனாலும், சமீப வருடங்களில் நாடு கடும் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது. கொவிட் 19 பரவல் அந்த நிலையை மேலும் மோசமாக்கியிருப்பதாகவும் மூடப்பட்ட அந்த நாட்டிலிருந்து வெளியே வரும் விபரங்களிலிருந்து தெரிகிறது. துருக்மேனிஸ்தான் அரசோ தனது நாட்டில் கொவிட் 19 கிஞ்சித்தும் பரவவில்லை என்றும் தமக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லையென்றும் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்