“இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளைப் போடுவது அதிகளவில் பக்க விளைவுகளை உண்டாக்கும்,” என்கிறது ஆராய்ச்சி.
கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் ஒரு நிறுவனத்தின் ஊசியைப் போட்டுக்கொண்டபின் இரண்டாவதாக இன்னொரு நிறுவனத்தின் ஊசியை மாற்றிப் போடுவதால் பக்க விளவுகள் உண்டாகச் சாத்தியங்கள் அதிகம் என்கிறது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியொன்று. வெவ்வேறு ஊசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு அதிக அளவில் காய்ச்சல், தசை நார் நோவு போன்றவை ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.
அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து பல நாடுகளிலும் மிக மிகக் குறைந்த அளவில் மோசமான பக்க விளைவுகளையும், இறப்புக்களையும் உண்டாக்கியிருப்பதால் அதைப் பாவிப்பதைச் சில நாடுகள் நிறுத்தியிருக்கின்றன, நிறுத்தி வருகின்றன. மேலும் சில நாடுகளில் அஸ்ரா செனகாவின் தயாரிப்புப் பிரச்சினைகளால் முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவதாக அதே நிறுவனத்தின் தடுப்பூசி கொடுப்பதற்கு அது கிடைக்கவில்லை.
ஏற்கனவே அதில் ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவதாக அதையே கொடுப்பதா, அல்லது வேறொன்றை மாற்றுவதா, மாற்றுவதால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுமா போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. எனவேதான் குறிப்பிட்ட ஆராய்ச்சி நடாத்தப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள் பொதுவாக பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியைக் கொடுத்து வருகின்றன. எனவே அவ்விரண்டு தடுப்பூசிகளையும் வைத்தே இந்த ஆராய்ச்சி நடாத்தப்பட்டிருக்கிறது. இவ்வாராய்ச்சியில் அதனால் ஏற்படும் குறுகிய காலப் பக்கவிளைவுகள் பற்றியே பெரிதும் கவனிக்கப்பட்டிருக்கிறது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட இந்த ஆராய்வில் குறிப்பிடப்படும் பக்க விளைவுகள் ஆபத்தானவையல்ல, நீண்டகாலம் நிலைப்பவையுமல்ல. அஸ்ரா செனகா + பைசர் பயோன்டெக் ஆகியவைகளின் தடுப்பூசிகளில் ஒவ்வொன்றைப் பெற்றுக்கொண்டவர்களில் பலர் அஸ்ரா செனகாவின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை விட அதிகமான அளவில் காய்ச்சல், தசை நார் நோவு போன்றவைகளுக்கு ஆளானார்கள்.
உலகளவில் ஏற்பட்டிருக்கும் தடுப்பு மருந்துத் தட்டுப்பாட்டினால் பரீட்சிக்கப்பட்டிருக்கும் இவ்விரண்டு தடுப்பு மருந்துகள் மட்டுமன்றி வெவ்வேறு தடுப்பு மருந்துகள் இரண்டு சேர்த்துக் கொடுக்கப்படலாம், வெவ்வேறு ஒழுங்கில் அவை கொடுக்கப்படலாம். அது போன்ற நிலைமையில் அவைகளின் குறுகிய கால, நீண்ட கால விளைவுகள் பற்றி ஆராய்வது முக்கியம் என்று மருத்துவ விற்பன்னர்கள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்