உருகுவேயில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிச் சிகிச்சை பெறுகிறவர்களில் 80 % இறந்துபோகிறார்கள்.
கடந்த வருடத்தில் உலகமெங்கும் கொரோனாத்தொற்றுக்கள் ஏற்பட்டபோது வேகமாகச் செயற்பட்டு நாட்டுக்குள் பரவாமல் காப்பாற்றிய நாடுகளில் ஒன்றென்று சிலாகிக்கப்பட்ட நாடுகள் மிகச் சிலவே. அவைகளில் முக்கியமான ஒன்று லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே. இவ்வருடம் அந்த நாட்டில் நிலவும் நிலைமையே நேர்மாறானதாக இருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் மாதமளவில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனாத் தொற்றுக்கள் வேகமாகப் பரவிவந்தன. உருகுவேயின் ஜனாதிபதி லூயிஸ் லாகாஸ் பௌ மார்ச் 13 ம் திகதி எடுத்த முடிவின்படி நாட்டின் பெரும்பாலான மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. தொற்றுக்களால் அதிகமாகப் பாவிக்கப்பட்ட நாடான உருகிவேயின் பக்கத்து நாடான பிரேசிலுடனான 1,000 கி மீ எல்லை மூடப்பட்டது. பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்களுக்காக டிஜிடல் வழிக் கல்விமுறை வழக்கமாக்கப்பட்டது.
ஜனாதிபதி உடனடியான செயற்பாடுகள் தொற்றுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் சுமார் 3.5 மில்லியன் மக்கள் தொகையுள்ள நாட்டில் 1,527 பேர் மட்டுமே தொற்றுக்கு உள்ளாகியதுடன் இறந்தவர் தொகை செப்டெம்பரில் கூட சுமார் 42 ஆக மட்டுமே இருந்தது. நாடு முழுவதும் மக்கள் கொரோனாத் தொற்றுக்களுக்காகப் பரிசீலிக்கப்படல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஒரு தொற்றுக்காகச் சராசரியாக 237.7 பேர் உருகுவேயில் பரிசீலிக்கப்பட்டனர். பக்கத்து நாடுகளிலொன்றான ஆர்ஜென்ரீனாவிலோ அது 1.9 க்கு ஒரு பரிசீலனை என்ற அளவிலேயே இருந்தது.
கடந்த கொரோனாத் தொற்று அலையால் அதிகமாகப் பாதிக்கப்படாத நாடு என்பதால் மக்கள் அதன் அதீத பலத்தைப் புரிந்துகொள்ளவில்லையோ என்று சந்தேகப்படுவதாகத் தலைநகரான மொண்டிவீடியோவின் முக்கிய மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அங்கே தொற்றுக்களுக்கு உள்ளாகிய பலருக்கும் செயற்கையாகப் பிராணவாயு உதவி அவசியமாகிறது. அதன் பின்னரும் 80 விகிதமானவர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நாட்டில் கொவி 19 இறப்புக்கள் 700 ஐத் தாண்டிவிட்டன. இது கடந்த வருடம் முழுவதும் அவ்வியாதியால் இறந்தவர்களை விட நான்கு மடங்கைவிட அதிகமானது. இம்முறை கொவிட் 19 அலை காத்திரமாக இருக்கக் காரணம் பக்கத்து நாடான பிரேசிலில் பலரைக் கொன்றிருக்கும் பிரேசில் திரிபு உருகுவேயிலும் காலூன்றிவிட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பக்கத்து நாடுகளான பெரு, சிலே, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் கடந்த இரண்டு வாரங்களாகக் கொரோனாத் தொற்றுக்களால் இறப்பவர்கள் தொகை மிகவும் அதிகமாகியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. பெரு, சிலே, கொலம்பியா ஆகிய நாடுகள் வேகமாகத் தமது மக்களுக்குத் தடுப்பூசி போட்டு வருவதால் மக்கள் வியாதியைப் பற்றி முன்னரைப் போல விசனப்படாமலிருப்பது காரணமாக இருக்கலாமென்று நம்பப்படுகிறது.
தமது நாடுகளில் 25 விகிதமானவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போட்ட நாடுகளில் உருகுவேயும், சிலேயும் அடங்கும். இவைகள் உலகிலேயே மிக வேகமாகத் தமது மக்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவரும் நாடுகளில் முதலணியிலிருப்பவை என்று குறிப்பிடப்படுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்