பிரான்ஸில் இந்திய வைரஸ் :கொத்தாகப் பரவக்கூடிய 24 தொற்றுகள் கண்டறிவு.
பிரான்ஸில்’இந்திய வைரஸ்’ எனப்படும் B.1.617 மாற்றம் அடைந்த திரிபுத் தொற்றுக்கள்அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறை (Santé publique France) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
நிலைமை மிகுந்த எச்சரிக்கையுடன்கண்காணிக்கப்பட்டு வருவதாக” நேற்று வெளியான அந்த அறிக்கை தெரிவித் துள்ளது.
பிரான்ஸின் பெருநிலப்பரப்பில் ஏழு பிராந்தியங்களில் – கொத்தணியாகப் பலருக்குப் பரவக்கூடிய விதமான சூழ்நிலைகளில்- 24 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிரான்ஸின் நிர்வாகத்துக்குரிய கயானா(Guyana) எட்டாவது தொற்றுப் பிராந்தியமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
24 கொத்தணிகளில் 20 இந்தியாவில்இருந்து திரும்பியவர்கள் மூலமே ஏற்பட்டுள்ளது. ஏனைய இரண்டு தொற்றுகள் கப்பல் ஒன்றில் பணியாற்றும் இந்தியமாலுமி ஒருவர் மூலம் பரவி உள்ளன.கடைசி இரண்டு தொற்றுக்களில் ஒன்று சுவிற்சர்லாந்து நாட்டுடன் தொடர்புடையது.Auvergne-Rhône-Alpes பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட தொற்றுக்களே சுவிஸ் நாட்டுடன் தொடர்புடைய குடும்பம் ஒன்றில் பரவி உள்ளது. இந்தியாவுடன் நேரடியாகத் தொடர்புபட்டிராத மற்றொரு கொத்தணி பாரிஸ் பிராந்தியத்தில் தெரியவந்துள்ளது. வேலை இடம் ஒன்றுடன் தொடர்புடைய அந்தத் தொற்றுக்கள் இந்தியத் திரிபாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இத்தகவல்களை பொதுச் சுகாதாரப்பணியகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பரவும் வைரஸ் திரிபை உலகளாவிய “கவலைக்குரியது” என்றுஉலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்திருப்பதால் பிரான்ஸின் அதிகாரிகள் மிக விழிப்புடன் தொற்றுக்களைக் கண்காணித்து வருகின்றனர். இங்கிலாந்தில் இதுவரை ஆயிரத்து 313 இந்திய வைரஸ் B.1.617 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 793 தொற்றுக்கள் ஒரு வாரகாலத்தில் பதிவாகி உள்ளன.
இதேவேளை -பிரான்ஸ் அரசு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது கட்டாயதனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படவேண்டிய பயணிகளது பட்டியலில் புதிதாக மேலும் நான்கு நாடுகளைச் சேர்த்துள்ளது.
பஹ்ரைன், கொலம்பியாகோஸ்ரா ரிக்கா, உருகுவே ஆகிய நாடுகளின் பயணிகளே புதிய சுகாதாரவிதிகளுக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டாய தனிமைப்படுத்தல் இந்தியா, பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், நேபாளம், சிறிலங்கா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், துருக்கி, கட்டார் ஆகிய நாடுகளது பயணிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.