அமெரிக்க எரிநெய்க்குழாய்களை செயலிழக்கவைத்த “ஹக்கர்ஸ்” அமைப்பின் இணையத்தளங்கள் மூடப்பட்டன.
ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் மிகப் பெரிய எரிபொருள் விநியோக நிறுவனத்தின் தொலைத்த்தொடர்புகள் வெளியேயிருந்து தாக்கும் இணையத் தளக் குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றினால் கைப்பற்றப்பட்டன. விளைவாக கொலொனியல் பைப்லைன் கொம்பனியால் தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யமுடியாமல் போனது.
தாக்குதலுக்குள்ளாகிய நிறுவனம் 75 பிட்கொய்ன்களைத் தண்டப்பணமாகக் கொடுக்கவேண்டியதாயிற்று. அதன் பின்னரே அவர்களுக்குத் தமது தொலைத்தொடர்புகளைப் பாவித்து மீண்டும் எரிபொருள் விநியோகங்களுக்கான குளாய்களைத் திறக்க முடிந்தது.
இணையத் தளங்களைத் தாக்கும் களவாணிக் குழுக்கள் மீது நடவடிக்கையெடுத்துக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டங்களை அமெரிக்க அரசு கொண்டுவரத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அப்படியான சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் அவையால் எவ்வளவு பயனிருக்கும் என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அதற்கு முன்னர் நடந்த இத்தாக்குதல் பற்றி அமெரிக்காவின் குற்றவியல் ஆராய்ச்சி அமைப்பு விசாரணைகளில் இறங்கி DarkSide என்ற பெயருள்ள இணையத் தளக் குழுவொன்றே மேற்கண்ட தாக்குதலின் பின்னாலிருக்கிறது என்றும் அதன் உறுப்பினர்கள் ரஷ்யாவில் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டது. அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்துத் தண்டிக்கப்போவதாக ஜோ பைடன் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
“டார்க்சைட்” என்றழைக்கப்படும் இணையத் தளம் தமது மக்கள் தொடர்பு சேவைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறது. தமது தொடர்புகளை அமெரிக்க அரசின் துன்புறுத்தல்களால் தாம் இழந்து விட்டதாகவும் 48 மணிக்குள் தமது மொத்தத் தளமும் முழுவதுமாகச் செயலிழக்கும் என்றும் ரஷ்ய மொழியில் அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.
பொதுத் தளங்களில் “டார்க்சைட்” வெவ்வேறு சேவைகளைக் கொடுப்பதாகக் குறிப்பிட்டாலும் அதன் பின்னணியில் ஒரு களவாணிக் குழு பல குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. தமது தளத்தை மூடுவதன் மூலம் அவந்தக் குழுவினர் வேறு வழியில் அவதாரமெடுக்க அவகாசத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்று அமெரிக்க குற்றவியல் அமைப்பு குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்