இரண்டாவது கொரோனாத்தொற்று அலையால் பாதிக்கப்பட்டிருந்த காஸாவின் மருத்துவ சேவை காயப்பட்டவர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது.
இஸ்ராயேலுடன் மோதலுக்கு இறங்கியிருக்கும் ஹமாஸ் குழுவினரால் காஸா பிராந்தியத்தின் மருத்துவ சேவை மூச்சுத்திணகிறது. சுமார் 365 சதுர கி.மீ பரப்பளவான காஸாவில் சுமார் இரண்டு மில்லியன் பேரை அடைபட்டு வசிக்கிறார்கள். ஒரு பக்க எல்லையாக மத்தியதரைக் கடல் இருக்கிறது. தெற்கில் எகிப்து தனது எல்லையை பெரும்பாலும் மூடிய வைத்திருக்கும். மீதி எல்லைகளில் இஸ்ராயேலின் எல்லைகள் கடும் காவலுடன் இருக்கின்றன.
இஸ்ராயேலின் கடுமையான கட்டுக்காவல்களுக்குள் வாழும் காஸாவில் பொதுவாகச் சகலவிதமான வசதிகளும் மிகக் குறைவாகவே இருக்கும். எகிப்துடனான எல்லைகளில் ஆங்காங்கே இரகசியச் சுரங்கங்கள் மூலமாகவே காஸாவுக்குத் தேவையான அவசிய பொருட்களே கொண்டுவரப்படுகின்றன. காஸாவை ஆளுபவர்கள் சர்வதேசத்தால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதால் அங்கு வாழும் மக்களுடைய வாழ்வு அன்றாடம் போர்ப்பிரதேசத்தில் வாழ்வது போலவே வாழவேண்டியிருக்கிறது.
கடந்த வருடத்துக் கொரோனாத் தொற்றுகளால் அதிகமாகப் பாதிக்கப்படாத காஸாவாசிகள் இரண்டாவது தொற்று அலையால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 105,700 பேருக்குத் தொற்றுக்கள் ஏற்பட்டுச் சுமார் 1,000 பேர் ஏற்கனவே இறந்திருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் காஸாவின் மருத்துவமனைகளில் அவசரகால நோயாளிகளுக்காக மொத்தமாக நூறு படுக்கைகள் கூடக் கிடையாது.
2007 இல் அப்பகுதி மக்கள் ஹமாஸ் இயக்கத்தினருக்கு வாக்களித்துத் தமது ஆள்பவர்களாக்கியிருந்த காலம் முதல் அப்பிராந்தியம் சகல எல்லைகளிலும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போன்றவை மனிதாபிமான அமைப்புக்களால் உள்ளே கொண்டுவரப்படுகின்றன. அங்கிருக்கும் ஷிபா மருத்துவமனை தவிர மற்றவைகள் மனிதாபிமான அமைப்புக்களாலேயே நடாத்தப்பட்டு வருகின்றன.
ஹமாஸ் இயக்கத்தினரின் இஸ்ராயேலுடனான போரில் ஏற்கனவே 27 பிள்ளைகள் உட்பட 103 பேர் காஸாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அறுநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் அவசரகாலச் சிகிச்சைக் கட்டில்கள் இல்லையென்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன் கொரோனாத் தொற்றுள்ளவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிக்காவிட்டால் தொற்றுப் பரவலும் அதிகமாகி இறப்புகள் அதிகரிக்கும் என்ற நிலை.
மருத்துவமனைகளின் நிர்வாகிகளும், மருத்துவ சேவையாளர்களும் அங்கு ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் இல்லாதிருக்கும் நிலைமையைப் பற்றி விபரித்து வருகிறார்கள். போர் மேலும் தொடருமானால் நோயாளிகளைக் கையாளும் வசதிகள் தங்களிடமில்லையென்று குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்