கொரோனாப் பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் சூழலுக்குப் புதியதொரு உபத்திரவமாக மாறியிருக்கின்றன.
ஏற்கனவே உலகம் விதம்விதமான குப்பைகளால், முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகளால் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகிறது. அதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. அந்த நிலையில் கொரோனாத் தொற்றுக்கள் புதியதாகச் சில பொருட்களை எங்கள் குப்பைகளுடன் சேர்த்துவிட்டிருக்கிறது. உலகின் பெருமளவு நாடுகளில் கட்டாயப்படுத்தப்பட்டு அணியப்படும் முகக்கவசங்கள், மருத்துவ சேவையினரிடையே அவசியமாகியிருக்கும் பாதுகாப்பு உடைகள் ஆகியவையும் கடைசியில் குப்பைகளாகின்றன. அதிலும் ஒற்றைப் பாவிப்புக்கான முகக்கவசங்கள் தற்போது குப்பைக் கூடைகள், நீர் நிலைகள், வீதியோரங்கள் உட்பட சகல நிலப்பரப்பிலும் எறியப்படும் ஒரு பொருளாகியிருகிறது. மாதாமாதம் மனிதர்களால் 129 பில்லியன் முகக்கவசங்கள் பாவிக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.
பாவித்த முகக்கவசங்களை மீண்டும் பயன்படுத்துவதில் சில நாடுகளில் வெவ்வேறு முயற்சிகள் செய்து வருகின்றன. ஆஸ்ரேலியாவில் அவைகளை வீதிகள் உண்டாக்குவதற்காகவும், பிரிட்டனில், அமெரிக்காவில் பூங்காவில் கதிரைகளாகவும், பிரான்சில் நிலத்தில் விரிக்கும் கம்பளங்களாகவும் மாற்றப்படுகின்றன. அவற்றைத் தவிர வேறு சிறு முயற்சிகளும் தனியார் நிறுவனங்களால் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பெருமளவு முகக்கவசங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய இலாபம் தரம் பயன்பாடுகளை இதுவரை எவராலும் உண்டாக்கமுடியவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
பிரான்சில் கடந்த வருடம் சுமார் 40,000 தொன் பாவிக்கப்பட்ட முகக்கவசங்கள் எரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆஸ்ரேலியாவின் நிறுவனம் அவற்றை வீதிகளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தில் தம்முடன் இணையும்படி சர்வதேச நிறுவனங்களிடம் விண்ணப்பித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்