ஜேர்மனிய கத்தோலிக்க குருமார், பாப்பரசரின் நிலைப்பாட்டை எதிர்த்து ஓரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
கத்தோலிக்க விசுவாசிகளிடையே வத்திக்கான் தலைமையகம் தொடர்ந்தும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குத் திருச்சபை திருமணம் செய்துவைக்க மறுப்பது பற்றி அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. ஜேர்மனியிலும் அதேபோலவே கத்தோலிக்கர்கள் உணர்ந்து வருவதுடன் அதையெதிர்த்து வத்திக்கானுக்கு எதிராகக் கொடிதூக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். இவ்வருட ஆரம்பத்திலிருந்து நூற்றுக்கணக்கான கத்தோலிக்க குருமார் ஓரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்குக் கத்தோலிக்க தேவாலயங்களில் திருமணம் செய்துவைத்து வருகிறார்கள்.
“கடவுள் தான் அன்பு என்று யோவானின் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது எந்த அன்பு உண்மையானது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதரிடம் இருக்கிறதா?” என்று கேள்வியெழுப்புகிறார்கள் அவர்கள்.
புர்ஹாட் ஹூசெ என்ற ஜேர்மனிய குருவானவர் தனது சக குருமார்களுடன் சேர்ந்து வத்திக்கானுக்கு எதிராக இவ்விடயத்தில் இயங்க ஆரம்பித்து அதை ஜேர்மனியின் கத்தோலிக்க தேவாலயத்துக்குத் தெரிவித்தார். “எனது அறைகூவலைக் கேட்டு இதுவரை 2,600 ஜேர்மனியக் கத்தோலிக்க குருக்கள் நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கைத் தம்பதிகளுக்கு மோதிரம் மாற்றிக்கொள்ளும் சடங்கைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள்,” என்கிறார் ஹூசெ.
அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சில வருடங்களாகவே கத்தோலிக்க திருச்சபை அதற்குள் பல்லாண்டு காலங்களாக நடந்துவந்த பாலினக் குற்றங்கள், தவறான நடத்தைகளை மூடி மறைத்தது போன்ற குற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மனிதர்களின் கோபத்தை எதிர்நோக்கி வருகிறது. ஜேர்மனியிலும் அக்குற்றங்களைப் பற்றிய விசாரணைகளும் வெளிப்படுத்தல்களும் ஓரிரு வருடங்களாக வெளியாகிக் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாணப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கத்தோலிக்க குருமார்களில் ஒரு சாரார் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க ஜேர்மனியக் கத்தோலிக்க உயர்பீடம் தயாராக இல்லை. அவர்கள் இதை ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகக் கண்டுகொள்ளவில்லை. பதிலாக இவ்விடயம் உட்பட, பெண்கள் கத்தோலிக்க குருக்களாகுதல் போன்ற விடயங்களுக்குக் கத்தோலிக்க திருச்சபை தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமா? என்ற சிந்தனையிலிருக்கிறது.
சாள்ஸ் ஜெ.போமன்