கொரோனாத்தொற்றுக்கள் மோசமாகப் பரவியிருக்கும் கோயம்புத்தூர் இந்துக் கோவிலில் கொரோனாதேவி சிற்பம் ஸ்தாபிக்கப்பட்டது
இந்தியா தொடர்ந்தும் கொரோனாக்கிருமிகளின் பரவலால் தத்தளிக்கிறது. உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள் மீண்டும் சுமார் 4,000 அதிகமானவர்கள் ஒரே நாளில் இறந்ததைக் குறிப்பிடுகின்றன. பரவல் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னணியிலிருக்கிறது. கோயம்புத்தூர் நகரத்தில் கொரோனாப் பரிசீலனை நடாத்தப்படுகிறவர்களில் மூவரில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அது இந்தியாவிலேயே தற்போது மிக அதிகமான விகிதமாகும்.
அதைத் தெரிந்துகொண்டோ என்னவோ கோயம்புத்தூர் மக்களுக்குக் கொரோனாக் கிருமியின் மீதான பயத்தைப் போக்குவதன் மூலம் அவர்களை அமைதிப்படுத்தலாம் என்ற நோக்கில் காமாட்சிபுரி பீடத்தினால் 1.5 அடி உயரத்திலான கறுப்பு நிறக் கொரோனா அம்மன் சிலையைப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
“கொரோனா கிருமிகளின் கடுமையான தாக்குதலால் மனித வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. அம்மை மற்றும் காலரா போன்ற கொடும் நோய்கள் நாட்டைத் தாக்கியபோது பலர் உயிர் இழந்தனர் என்பதை வரலாற்றில் காணலாம். அதைத் தொடர்ந்து மாரியம்மன், மாகாளியம்மன், கருமாரியம்மன் ஆகியவைக்கு தவிக்கும் மக்களுக்குத் உதவும் பலமுண்டு என்ற நம்பிக்கையுடன் கிராமங்களில் வழிபட்டுள்ளனர். வேப்ப இலைகளைக் கொண்ட குடம் வைக்கப்பட்டு வழிபடும் இடங்கள் பின்னர் கோயில்களாக மாறின. அவ்விடயங்களைப் பற்றி வரலாற்றில் விபரமாக எழுதப்படவில்லை என்றாலும் அது மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வழிபாட்டு முறை,” என்று இந்தச் சிலை ஸ்தாபிக்கப்பட்டது பற்றி காமாட்சிபுரி ஆதீனத்தின் சிவலிங்கேஸ்வர சுவாமி விளக்கம் தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவினால் அலைக்கழியும் மக்களுக்கு உறுதியைக் கொடுத்துக் காப்பாற்ற மஹா யாக்யா பூசை 48 நாட்களுக்குக் கோவிலில் நிறைவேற்றப்படும். அப்பூசைகளில் பூசை நடத்துபவர்கள் மட்டுமே பங்குபற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஐந்து வருடங்களுக்கு கொரோனா தேவிக்குக் கொண்டாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பெண் தெய்வமாகக் கொரோனா அம்மன் பிரதிஷ்டை செய்யப்படுவது இந்தியாவில் இது முதல் தடவையாக இருப்பினும், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஏற்கனவே கேரளாவில் ஒருவர் கொரோனாக் கிருமியின் வடிவில் அதைத் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார். கொல்லம் நகரில் கடைக்கால் என்ற இடத்திலிருக்கும் அனிலன் என்பவரே அதைச் செய்தார்.
அனிலன் தனது கொரோனாச் சிலையைப் பற்றிக் குறிப்பிடும்போதும் இந்து சமயத்தின் கோட்பாட்டின்படி கடவுள் பற்பல வடிவங்களில் தோன்றுவார் என்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தார். காமாட்சிபுர ஆதீனச் சுவாமிகள் போலவே அனிலனும் பெரும் தொற்றுக்கள் ஏற்பட்ட சமயங்களில் இந்து மத நம்பிக்கையுள்ளவர்கள் இதுபோன்ற வழிபாடுகளை ஆரம்பித்ததாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
தனது கொரோனாத் தெய்வத்துக்கான பூசைகளில் எவரையும் கலந்துகொள்ள அனுமதிக்கப்போவதில்லை என்றி அனிலன் குறிப்பிட்டிருந்தார். அவரது அந்தச் செய்கைக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகள் 2020 ஜூன் மாதமளவில் கொரோனாத் தொற்றுக்கள் தொடர்ந்து பரவிக்கொண்டிருந்தபோதும் கோவில்களைத் திறப்பதற்கு அனுமதியளித்ததை எதிர்த்தே அதைச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்