இந்தியத் திரிபுக் கொரோனாக் கிருமிகளுக்கெதிரான எதிர்ப்புச் சக்தி இரண்டு தடுப்பூசிகள் போட்டபின் கிடைக்கிறது.
கொவிட் 19 இன் இந்தியத் திரிபு என்று குறிப்பிடப்படும் B.1.617 க்கெதிரான பாதுகாப்பு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு உண்டாகிறது என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியொன்று தெரிவிக்கிறது. சமீப நாட்களாகப் பிரிட்டனின் படு வேகமாகப் பரவி, அவர்களைக் கலவரப்படுத்தியிருக்கும் நிலைமையிலே இந்து ஒரு ஆறுதலான செய்தி என்று அமைச்சர் மட் ஹான்கொக் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனில் பாவிக்கப்படும் அஸ்ரா செனகா, பைசர் பயோன்டெக் ஆகிய தடுப்பு மருந்துகளே குறிப்பிட்ட ஆராய்வில் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ரா செனகாவின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு 60 % விகிதப் பாதுகாப்பும், பைசர் பயோன்டெக்கின் இரண்டு தடுப்பூசிகளும் சேர்ந்து 88 % பாதுகாப்பும் கொடுப்பதாகத் தெரிகிறது. இவ்விரண்டு தடுப்பூசிகளில் முதலாவது மட்டும் 33 % பாதுகாப்பையே கொடுக்கின்றன. அஸ்ரா செனகாவின் தடுப்பூசிகள் பைசரின் தடுப்பூசிகளை விடச் சற்றுக் காலம் கழிந்த பின்னே பலமான பாதுகாப்பையளிக்கின்றன.
“இதன் மூலம் இரண்டாவது தடுப்பூசியின் முக்கியத்துவம் எமக்குப் புரிகிறது,” என்கிறார் மட் ஹான்கொக். பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகள் தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கும் கொரோனாத் திரிபுகள் எதையும் எதிர்கொள்ளும் பாதுகாப்பைக் கொடுப்பவை என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கடந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்