ஓஹையோ மா நிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களிடையே முதலாவது மில்லியன் டொலர் வெற்றியாளர்.
அமெரிக்காவின் பல பாகங்களிலும் கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் பணமுடிப்புக்களும் உண்டு. ஓஹையோ மா நிலத்தில் முதலாவது மில்லியன் தடுப்பூசி எடுத்தவர்களிடையே பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
அவர்களிடையே அபிகேல் புகென்ஸ்கே என்ற பெண்மணி ஒரு மில்லியன் டொலர்களைப் பரிசாகப் பெறுகிறார். ஜோசப் கஸ்டல்லோ என்ற இளைஞர் தனது கல்லூரி உயர்கல்விக்கான செலவுகளைப் பரிசாகப் பெற்றிருக்கிறார். இவ்வார ஆரம்பத்தில் மேற்கண்ட பரிசுகளுக்கான குலுக்கல்கள் நடத்தப்பட்டன.
அந்த மாநிலத்தில் சுமார் 2.7 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஒரு மில்லியன் டொலர்களுக்கான பரிசுப் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள். கல்லூரிப் படிப்புக்கான செலவுகள் பரிசு என்ற 12 – 17 வயதினருக்கிடையே நடாத்தப்படும் குலுக்கலில் 104,000 இளவயதினர் தமது பெயரைப் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
வரப்போகும் ஞாயிறன்று வரை இந்தத் தடுப்பூசி பெற்றவர்களுக்கான பரிசுப் பதிவு திறந்திருக்கும். மே 12 இல் இப்பரிசுகள் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை 33 % ஆல் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் பல பாகங்களிலும் இதே போலவே ஊக்கப் பரிசுகள் தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது.
வரவிருக்கும் நான்கு வாரங்களிலும் வாரத்துக்கொருமுறை அதிர்ஷ்ட எண்கள் குலுக்கப்படும். பரிசு பெற்றிராதவர்களின் பெயர்களும் எண்களும் அதற்கடுத்த குலுக்கலில் சேர்த்துக்கொள்ளப்படும்.
சாள்ஸ் ஜெ.போமன்