இரண்டாம் ஊசி கொடுப்பதற்காக எந்த விலைக்கும் அஸ்ரா செனகாவினதை வாங்க அலையும் சிறீலங்காவுக்கு எச்சரிக்கை!
இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளில் முதல் ஊசியை சிறீலங்கா அரசு ஒரு சாராருக்குக் கொடுத்திருக்கிறது. அந்தத் தடுப்பு மருந்தின் தயாரிப்புப் பிரச்சினைகளாலும், இந்தியாவுக்கே அவை போதாமலிருப்பதாலும் இரண்டாவது ஊசிக்கான மருந்து சிறீலங்காவுக்குக் கிடைக்கவில்லை.
எந்த விலைக்காவது, கறுப்புச் சந்தையிலாவது அஸ்ரா செனகாவின் மருந்துகளில் 600,000 வாங்க சிறீலங்கா அவதிப்படுகிறது. அதற்காக உலகின் பல நிறுவனங்களுடனும் சிறீலங்கா தொடர்பு கொண்டிருக்கிறது. சுமார் 15 தனியார் நிறுவனங்கள் உயர்ந்த விலைக்குத் தம்மால் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்தைத் தரமுடியுமென்று குறிப்பிட்டிருக்கின்றன.
தமக்குத் தடுப்பு மருந்துகளை விற்க முற்படுகிறவர்களின் மருந்துகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள சிறீலங்கா அரசு அந்த மருந்துத் தயாரிப்பாளர்களான அஸ்ரா செனகாவைத் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டிருக்கிறது.
“எந்த ஒரு தனியார் நிறுவனங்களிடமும் தமது பெயரிலான தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்யவேண்டாம்,” என்று சிறீலங்காவுக்கு அஸ்ரா செனகாவின் ஆசியப் பிராந்திய நிறுவனத் தலைவர் ஜெஸ்பர் மெய்ன்ஸ் ஆலோசனை கூறியிருக்கிறார்.
“தற்போதைய நிலையில் எமது தயாரிப்புக்கள் நேரடியாக நாடுகளின் அரசாங்கங்களுக்கும், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் தடுப்பு மருந்துத் திட்டத்துக்கும் மட்டுமே விற்கப்படுகின்றன. எந்த ஒரு தனியாருக்கும் நாம் தடுப்பு மருந்துகளை விற்கும் நிலையில் இல்லை. எனவே எமது தடுப்பு மருந்துகள் என்று குறிப்பிட்டவையை வாங்காதீர்கள்,” என்கிறது அஸ்ரா செனகா நிறுவனம்.
இரண்டாவது தடுப்பூசிக்காகப் பலர் எதிர்பார்த்திருக்கும் சமயம் ஒழுங்கின்றிப் பின் வழியாக ஒரு சாரார் பணம் கொடுத்துத் தமக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிறீலங்காவில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்