பின்லாந்துப் பிரதமர் நாட்டின் வரிப்பணத்தில் குடும்பத்துடன் காலைச்சாப்பாடு சாப்பிட்டதாகக் குற்றச்சாட்டு.
தனது சொந்தச் செலவையும், தனது உத்தியோகபூர்வமான செலவுகளையும் தெளிவாகப் பிரித்துக்கொள்ளவேண்டுமென்ற கோட்பாடுள்ள ஸ்கண்டினேவியாவில் பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் தனது குடும்பத்தினருடன் காலையுணவை அரசின் செலவில் சாப்பிட்டு வந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மாதாமாதம் சுமார் 850 எவ்ரோ அதற்காகச் செலவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன.
சன்னா மரீன் தனது கணவர் பிள்ளைகளுடன் தனது உத்தியோகபூர்வமான தங்குமிடத்துக்குச் சென்று காலையுணவை அருந்திவருவதாகக் கடந்த வாரத்தில் நாட்டின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கான 300 எவ்ரோ செலவு மக்களின் வரிப்பணத்தால் கொடுக்கப்படுகிறது என்று முதலில் வெளியிடப்பட்ட விபரங்கள் மீண்டும் அலசப்பட்டு அதற்காக மாதம் 850 எவ்ரோக்கள் செலவாவதாகப் பின்னர் விபரங்கள் வெளியிடப்பட்டன.
பிரதமர் சன்னா மரீன் அங்கே தான் குடும்பத்துடன் சாப்பிடுவது தவறானது என்று தெரியாது என்று குறிப்பிட்டிருக்கிறார். அது தவறென்று தெரிந்திருப்பதால் அச்செலவுகளைத் தானே கொடுத்துவிடவிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதுபற்றிப் பொலீசார் விசாரணை ஆரம்பித்திருக்கிறார்கள். சன்னா மரீனுக்கு அந்த விபரங்களை வெளியிடாததன் மூலம் அவரது உதவியாளர்கள் யாராவது தவறு செய்திருக்கிறார்களா என்று அவ்விசாரணையில் ஆராயப்படும்.
அதேசமயம், அவருக்கு முன்னர் அப்பதவியிலிருந்த அரசியல்வாதிகள் சன்னா மரீன் மீது கடுமையான விமர்சனத்தை வீசியிருக்கிறார்கள். இதுவரை அங்கே பிரதமர்களாக இருந்தவர்களுக்கெல்லாம் தெரிந்த அந்த வழக்கம் தற்போதைய பிரதமருக்குத் தெரியாதது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்