அரசாங்கமொன்றை அறிவிக்க 25 நிமிடங்கள் கெடு மட்டுமே இருக்கும்போது இஸ்ராயேலில் எட்டுக் கட்சிகள் ஆட்சியமைப்பதை அறிவித்தன.

அடுத்தடுத்துப் பல தேர்தல்கள் கடந்த இரண்டு வருடங்கள் நடாத்தப்பட்டும் இஸ்ராயேலில் எந்த ஒரு கட்சியும் கணிசமான அளவில் அதிக ஆதரவைப் பெறமுடியவில்லை. ஆட்சியமைப்பதென்பதை அகப்படும் கட்சிகளின் ஆதரவுடன் காய்ச்சும் கூழாகப் பாவித்து நத்தான்யாஹு பிரதமர் பதவியைப் பற்றிக்கொண்டிருந்தார்.பனிரெண்டு வருடங்களின் பின்னர் முதல் தடவையாக மற்றைய கட்சிகள் அவரை ஆட்சியிலிருந்து இறக்குவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

https://vetrinadai.com/news/world-political-news/mansoor-lod-arab/

மார்ச் 23 ம் திகதி நடந்த தேர்தலில் கொத்துக் கொத்தாகச் சில இடங்களைப் பிடித்த எட்டுக் கட்சிகள் ஒன்றிணைந்து புதனன்று நள்ளிரவுக்கு முதல் தாம் ஒரு அரசாங்கத்தை ஒட்டுப்போட்டிருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறார்கள். நத்தான்யாஹூவை மீண்டும் பிரதமராக வர அனுமதிக்க விரும்பாத வலது, மத்திய, இடதுசாரிக் கோட்பாடுகளக் கொண்ட கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஒன்று உருவாகியிருக்கிறது.

தமக்குள் கோட்பாட்டு ரீதியாக ஒற்றுமைகளில்லாத அரசாங்கத்தில் இஸ்ராயேலின் வலதுசாரிக் கட்சியான நப்தலி பென்னட் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிரதமராக இருப்பார். அச்சமயத்தில் அக்கூட்டணிக்குள்ளிருக்கும் மத, இன வேறுபாடற்ற கட்சியின் தலைவர் யேர் லபிட் வர்த்தக அமைச்சராகப் பதவியேற்பார். பென்னட்டின் முதலிரண்டு வருடங்கள் பிரதமர் பதவி முடிந்தபின் யேர் லபிட் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பென்னி காண்ட்ஸ் என்ற மேலுமொரு கூட்டணியை ஏற்கனவே உண்டாக்கியிருக்கும் அரசியல் தலைவரும், யூத இனவாதக் கட்சியின் தலைவரான அவிக்டோர் லிபர்மான் மற்றும் சோஷியல் டெமொகிரடிக் கட்சியினரும் வெவ்வேறு அமைச்சர் பதவிகளைப் பெறுவார்கள். ஆனால், பாலஸ்தீன கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸும் அரசுக்குத் தனது ஆதரவைக் கொடுப்பார். ஆனால், அவரது கட்சியினர் அமைச்சர் பதவிகளெதுவும் ஏற்காமல் ஒதுங்கியிருப்பார்கள் என்பது பலராலும் ஆச்சரியமாகக் கவனிக்கப்படுகிறது.

புதிய இஸ்ராயேல் அரசைக் கவனித்தால் அதில் சகல அரசியல் கோட்பாட்டைக் கொண்ட கட்சிகளுடன், யூதர்களுக்கே இஸ்ராயேல் சொந்தம் என்று கருதும் கட்சியும், இஸ்ராயேலின் சிறுபான்மையினரான அராபியர்களின் கட்சியும் கூட ஒன்றிணைந்திருக்கின்றது. இந்த நிலைமையை நத்தான்யாஹு முடிந்தவரை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சகல நரிவேலைகளையும் செய்வார் என்றே அரசியல் கணிப்பாளர்கள் பலரும் ஆரூடம் கூறுகிறார்கள். எனவே புதிய அரசு ஒரு ஆபத்தான எதிர்க்கட்சித் தலைவரை எதிர் நோக்கவேண்டிய நிலையிலிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *