மென்மேலும் இறுகும் இஸ்ராயேல் – எமிரேட்ஸ் உறவுக்குச் சான்றாக இஸ்ராயேல் ஜனாதிபதியும் மனைவியும் எமிரேட்ஸ் விஜயம்.

டிசம்பர் மாதத்தில் இஸ்ராயேலின் பிரதமரொருவர் உத்தியோகபூர்வமாக எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தார். ஜனவரி 30 தேதியன்று சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு இஸ்ராயேல் ஜனாதிபதியை எமிரேட்ஸ் வரவேற்றது. 

ஜனாதிபதி இஷாக் ஹர்ஸோக்கும் அவரது மனைவி மிஷலும் எமிரேட்ஸின் இளவரசன் முஹம்மது பின் ஸாகித் அல் நஹ்யான் உட்பட்ட பல உயரதிகாரிகளை அங்கே சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று இஸ்ராயேல் ஜனாதிபதியின் காரியாலயம் தெரிவித்தது. இஸ்ராயேலின் அரசியல் தலைமையை வகிப்பது பிரதமராக இருப்பினும் ஜனாதிபதி பதவி நாட்டின் ஒற்றுமையைக் காட்டும் கௌரவப் பதவியாகக் கருதப்படுகிறது.

மத்திய கிழக்கின் அதி முக்கிய வர்த்தக, பொருளாதார மையமாகவும் உல்லாச தலமாகவும் எமிரேட்ஸை முன்னிறுத்தி வருகிறது நாட்டின் தலைமை. பொதுவாகவே பாதுகாப்பான இடமென்று கருதப்படும் அந்த நாட்டில் அபுதாபியில் ஒரு வாரத்துக்கு முன்னர் ஈரான் பின்னணி கொண்ட யேமனில் ஹூத்தி இயக்கத்தினர் காற்றாடி விமானத் தாக்குதல் நடத்தில் மூவரைக் கொன்றிருந்தனர். மீண்டும் இவ்வாரத்தில் எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

சவூதியுடன் சேர்ந்து யேமனில் போர் நடத்திவரும் எமிரேட்ஸ் சர்வதேச வர்த்தக, பொருளாதார வளரவேண்டுமானால் தமது நாடு பாதுகாப்பானது என்று காட்டவேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கும் சமயத்தில் இஸ்ராயேலின் ஜனாதிபதி விஜயம் நடப்பது குறிப்பிடத்தக்கது. எமிரேட்ஸுக்குப் பாதுகாப்பு அளிக்க தாம் தமது உளவு, பாதுகாப்புத் துறைகளின் உதவியைத் தரத் தயாரென்று கடந்த வாரம் இஸ்ராயேல் குறிப்பிட்டிருந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்