செக் குடியரசின் ஆயுதக் கிடங்கினுள் ஏற்பட்ட வெடிவிபத்து 140 ரஷ்ய ராஜதந்திரிகளைத் திருப்பியனுப்பியது.
சோவியத் யூனியனின் காலத்திலிருந்தே ரஷ்ய – செக்கிய உறவின் நெருக்கம் சர்வதேசம் அறிந்ததே. அந்த உறவு சோவியத் பிளவடைந்த பின்னரும் ரஷ்ய – செக்கிய ராஜதந்திர உறவாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி போல அமைந்தது செக் குடியரசின் ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தும் அதன் விளைவுகளும். ஒரு வாரத்துக்கு முன் 140 ரஷ்ய ராஜதந்திரிகள் செக் குடியரசிலிருந்து வெளியேறினார்கள்.
“செக் குடியரசின் அளவும், ரஷ்யாவுடனான நெருங்கிய உறவையும் வைத்துப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கிறது என்பது கேள்விக்குரியதாகிறது. என்ன செய்தார்கள் அத்தனை ராஜதந்திரிகளும் இங்கே? அவர்கள் இங்கே இருந்ததன் காரணம் வேறென்னவோ என்பது புரிகிறது,” என்கிறார் செக் குடியரசின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யீரி ஸ்னைடர்.
ரஷ்யாவின் ராஜதந்திரிகள் அங்கே அந்த அளவில் குவிக்கப்பட்டிருந்தது பற்றி நீண்டகாலமாகவே விமர்சித்து வந்தவர் ஸ்னைடர். ரஷ்யா செக் குடியரசில் வைத்திருந்தது ஒரு உளவு மையம் என்பதே அவரது கருத்தாகும். 2014 இல் செக் குடியரசின் ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட விபத்தே அவ்விரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுப் பிளவாகக் காரணமாகியிருக்கிறது.
அந்த வெளிவிபத்துப் பற்றிச் செக் குடியரசு ஆராய்ந்தபோது அத்துடன் தொடர்புள்ள இரண்டு உளவாளிகளே பின்னர் பிரிட்டனில் செர்கெய் ஸ்கிரிபாலையும் அவரது மகள் ஜூலியாவையும் விஷம் பாவித்துக் கொல்ல முயன்றவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. [ரஷ்ய உளவாளியான ஸ்கிரிபால் பிரிட்டனின் உளவாளியாகவும் செயற்பட்டார். அவரையும் மகளையும் 2018 இல் ரஷ்ய உளவாளிகள் நஞ்சு வைத்துக் கொல்ல முயன்றது வெளியாகி மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டன.]
இனிமேல் ரஷ்யாவும் – செக் குடியரசும் தத்தம் பக்கத்திலிருந்து ஏழு ராஜதந்திரிகளை மட்டுமே தமது நாடுகளில் வைத்துக்கொள்வார்கள் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக எந்தச் செக்கிய அரசும் துணிந்து செய்ய விரும்பாத விடயத்தைத் தற்போதைய அரசு செய்திருக்கிறது. செக் குடியரசு இப்போது ரஷ்யாவின் எதிரி நாடுகளில் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்