கொவிட் 19 வியாதிக்குத் தமது பெற்றோர்களிருவரையுமிழந்த பிள்ளைகளைக்குச் சமூகம் எதிர்காலம் அமைக்கவேண்டுமென்கிறார் மோடி.
அரசின் எண்ணிக்கைகளின்படி, இரண்டாம் அலையில் கொரோனாப் பெருவியாதியால் இந்தியாவில் இறந்தவர்களின் தொகை சுமார் 340,000 ஆகிறது. இரண்டாவது அலை என்று சமீப மாதங்களில் ஏற்பட்ட பெருமளவு தொற்றுக்களாலும், இறப்புக்களாலும் ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைகளிலொன்று இரண்டு பெற்றோரையும் கொவிட் 19 க்குப் பறிகொடுத்து அனாதைகளாகியிருக்கும் பிள்ளைகளாகும். அப்படியான பிள்ளைகள் பற்றி இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மே மாதக் கடைசியில் இந்திய அரசின் தரவுகளின்படி ஏப்ரல் 01 – மே 25 க்குள் மட்டும் 577 பிள்ளைகள் தமது இரண்டு பெற்றோர்களையும் இழந்திருப்பதாகத் தெரிகிறது. உண்மையான மொத்த இலக்கம் பல மடங்கு அதிகமாக இருக்கலாமென்றே கருதப்படுகிறது. ஏனெனில் பல்லாயிரக்கணக்கான கொவிட் 19 இறப்புக்கள் பதியப்படவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே அக்குழந்தைகளுக்கான உதவி நடவடிக்கைகள் பற்றித் தேசிய அளவில் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
“குழந்தைகள் சமூகத்தின் பொறுப்பு. எனவே, கொவிட் 19 ஆல் அனாதைகளாகியிருப்பவர்களுக்கான பொறுப்பை அரசே எடுக்கவேண்டும், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஊட்டவேண்டும்,” என்று கூறி அவர்களுக்கான திட்டங்கள் பற்றி நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ஒரு மில்லியன் ரூபாய்களிலான உதவித்திட்டத்தை மோடி அறிவித்திருந்தார். அப்பிள்ளைகள் 18 வயதாகியபின் மேலும் தொடர்ந்து 5 வருடங்களுக்கு அவர்களுடைய செலவுகள், பல்கலைக்கழகச் செலவுகளை அரசே ஏற்குமென்று அவர் அறிவித்தார். சிறிய குழந்தைகளாயின் அவர்களைப் பாடசாலைக் கல்விக்காகப் பதிந்து, தேவையானால் அவர்களுக்குத் தங்கிக் கல்வி கற்கும் வசதிகளுக்கும், அதை சுற்றிவர உண்டாகும் செலவுகளுக்கும் ஒழுங்குசெய்யப்படவேண்டும்.
சமூகவலைத்தளங்களில் பெற்றோரை இறந்த பிள்ளைகளைத் தத்தெடுக்கும்படி கேட்கும் வேண்டுகோள்களையும் காணமுடிகிறது. இந்திய அரசின் தத்தெடுக்கும் சட்டங்கள் கடினமானவை. கொவிட் 19 ஏற்படுத்தியிருக்கும் நிலைமையால் பிள்ளைகள் தவறானவர்களின் கைகளில் மாட்டிவிடக்கூடாதென்ற அச்சமும் எழுந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்