“வராதீர்கள், அமெரிக்கா எங்கள் சட்டம் ஒழுங்கைப் பேணி எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனமெடுக்கும்!”
உப ஜனாதிபதியாகத் தனது கன்னி வெளிநாட்டுப் பயணத்தை தென்னமெரிக்காவுக்குத் மேற்கொண்டிருக்கும் கமலா ஹாரிஸின் முதலாவது நிறுத்தம் குவாத்தமாலாவாகும். அங்கே அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது பயணத்தின் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கவில்லை. அவரது செய்தி அமெரிக்காவின் எல்லைகளை நோக்கி ஆயிரக்கணக்கில் கூட்டமாகப் பயணிக்கும் குவாத்தமாலாவின் புலம்பெயர்பவர்களை நோக்கியிருந்தது.
“அமெரிக்காவுக்கு வராதீர்கள், வராதீர்கள். அமெரிக்கா தனது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், எல்லைகளைப் பாதுகாப்பதிலும் தளரப் போவதில்லை,” என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கமலா ஹாரிஸுடன் அருகிலிருண்டார் நாட்டின் ஜனாதிபதி அலஹாந்திரோ ஜியமெத்தேய். வறிய நாடான, பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் குவாத்தமாலாவுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது பற்றிய திட்டங்கள் பற்றி அவர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கிறார்.
அவர்களுக்காக கொடுக்கப்படவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் தவிர, லஞ்ச ஊழல்கள் ஒழிப்பு, வீடுகள் கட்டும் திட்டங்கள், போதை மருந்துக் கடத்தல் ஒழிப்பு ஆகியவற்றில் அமெரிக்கா உதவும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்