இருபது வருடங்களுக்குப் பின்னர் பாலர்களை வேலைக்கனுப்புவது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
வறுமை, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் அடிக்கடி ஏற்படும் வெவ்வேறு பொருளாதாரப் பின்னடைவுகள் காரணமாக 2000 ஆண்டுக்குப் பின்னர் வயதுக்கு வராதவர்கள் குடும்பச் சுமைதாங்க வேலைகளுக்கு அனுப்பப்படுவது அதிகரிக்கிறது. முக்கியமாக 5 – 11 வயதுப் பிள்ளைகளை வேலைக்கனுப்புவது அதிகரித்திருப்பதைக் காணமுடிகிறது என்று ஐ-நா-வின் குழந்தைப் பேணுதல் அமைப்பான யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. இந்த நிலைமை கொரோனாத் தொற்றுக்களுக்கெதிரான கட்டுப்பாடுகளால் மேலும் அதிகரித்திருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
2016 ம் ஆண்டுவரை சர்வதேச ரீதியில் பாலர்கள் வேலைசெய்தல் குறைந்து வந்திருக்கிறது. 2000 ம் ஆண்டில் 256 மில்லியனாக இருந்த அது 2016 இல் 142 ஆகக் குறைந்திருந்தது அதன் பின்னர் அதிகரிக்க ஆரம்பித்து இப்போது உலகின் 160 மில்லியன் பிள்ளைகள் வருமானத்துக்கான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இரண்டாவது வருடமாக உலகெங்கும் சமூக, நகர முடக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. இது ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் நிலைமையை மேலும் மோசமாக்கும். முக்கியமாக ஆபிரிக்காக் கண்டத்திலேயே பிள்ளைகள் வேலைசெய்தல் வேகமாக அதிகரித்திருக்கிறது. கொரோனாத் தொற்றுக்களை வேகமாகக் குறைக்கும் நடவடிக்கைகள் அப்பிராந்தியத்தில் ஏற்படவில்லை.
பிள்ளைகளுள்ள குடும்பங்களுக்கு மான்யம், கட்டணமில்லாத பாடசாலைக் கல்வி, பாதுகாப்பான வேலைத்தளச் சூழல்கள், விவசாயத்துறையில் பாதுகாப்பு போன்றவைகளை ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் ஒழுங்குசெய்யவேண்டும். முக்கிய நடவடிக்கையாக விவசாயத் துறையில் நவீனப்படுத்தலை ஏற்படுத்தினாலே வேகமாக மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று சுட்டிக் காட்டுகிறது யுனிசெப். அங்குதான் 70 % பாலர்கள் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள். எனவே அதன் மூலம் வேகமாகப் 15 மில்லியன் பாலர்கள் வேலைகளுக்குப் போவதைக் குறைக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
நிலைமை கைவிட்டுப் போய்விடுமோ என்ற எல்லையில் நாம் நிற்கிறோம். நாடுகளின் அரசுகள் இதை மாற்றுவதற்கு ஆவன செய்யாவிடின் அடுத்த வருடமே வேலைக்குப் போகும் பிள்ளைகள் எண்ணிக்கை 206 மில்லியனாக உயர்ந்துவிடும், என்கிறது யுனிசெப்.
சாள்ஸ் ஜெ. போமன்