அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அடுத்த பக்கத்தில் “தென்னமெரிக்கப் போட்டிக் கோப்பை” பந்தயங்கள் ஆரம்பித்தன.
2020 இல் நடக்கவிருந்த உலகின் பெரும்பாலான முக்கிய நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டது போலவே “கொபா அமெரிக்கா” தென்னமெரிக்க உதைபந்தாட்டப் போட்டி நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், தென்னமெரிக்காவில் கொரோனாத்தொற்றுக்கள் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள்ளில்லாத நிலைமையில் அதை நடத்தவிருந்த நாடான ஆர்ஜென்ரீனா அதன் பின் கொலம்பியாவும், மறுத்துவிட பிரேசில் அப்போட்டிகளை நடத்தத் தயாராகியது.
கொரோனாப்பாதிப்புகளால் உலகில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாமிடத்திலிருக்கும் பிரேசிலில் வியாதி தொடர்ந்தும் தனது கைவரிசையைக் காட்டிக்கொண்டே இருக்கிறது. 480,000 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள். நாட்டில் எவ்வித முடக்கங்களையும் ஏற்படுத்தித் தொற்றுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மறுத்துவரும் ஜனாதிபதி பொல்சனாரோ உதைபந்தாட்டப் போட்டிகளை நடாத்த முன்வந்ததைப் பலரும் எதிர்க்கிறார்கள்.
பொல்சனாரோ பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தாரா என்பது பற்றி நாட்டின் பாராளுமன்றம் விசாரித்து வருகிறது. மக்களிடையே அவருக்கான ஆதரவு குறைந்து வருகிறது. வரவிருக்கும் தேர்தலையொட்டி பொல்சனாரோ தனக்கு ஆதரவு தேடுவதற்காகப் பல வகைகளிலும் மக்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேபோலவே உதைபந்தாட்டப் போட்டிகளையும் தனக்கு ஆதரவாகப் பாவிக்க முற்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
ஜூன் 13 ம் திகதி ஞாயிறன்று ஆரம்பித்திருக்கும் கொபா அமெரிக்கா போட்டிகள் இறுதிப் போட்டியான ஜூலை 11 வரை தொடரும்.
ஞாயிறன்று பிரேசில் வெனிசூலாவை எதிர்கொண்டது. அந்தப் பந்தயத்தில் பிரேசில் 3 – 0 என்ற எண்ணிக்கையில் வெற்றிபெற்றது. இன்னொரு பந்தயத்தில் கொலம்பியாவும் ஈகுவடோரும் விளையாடி கொலம்பியா 1 – 0 என்ற இலக்கத்தில் வெற்றிபெற்றது.
சாள்ஸ் ஜெ. போமன்