கோர்ன்வோலில் நடந்த ஜி 7 நாடுகளின் மாநாடு ஒற்றுமையான கடைசி அறிக்கை வெளியிடுதலுடன் நிறைவுபெற்றது.

டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்கா உலக நாடுகளுடன் நடந்துகொண்ட விதத்திலிருந்து பெரும் மாறுதலை அடைந்திருப்பதாக ஜோ பைடன் பல தடவைகள் அடிக்கோடிட்டுக் காட்டிப் பங்கெடுத்த மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது. முன்னெப்போதையும் விட சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் சர்வதேச ஆக்கிரமிப்பிலீடுபடுவதாக ஐரோப்பிய ஒன்றிய, ஆசிய நாட்டுத் தலைவர்களும் ஜி 7 மாநாட்டில் அமெரிக்காவின் மீள் வருகையை ஆவலுடன் கைகுலுக்கி வரவேற்றனர்.

உலகின் முதல் பணக்கார நாடுகளெனப்படும் கனடா, அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் கலந்துகொண்டார். ஏழு நாடுகளின் தலைவர்களின் முக்கிய கூட்டங்கள் நடந்துகொண்டிருக்க உயரதிகாரிகள் அந்த நாடுகள், மற்றும் அவைகளுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுடனான சந்திப்புக்களை வெவ்வேறு இடங்களில் அல்லது தொலைத்தொடர்புகளின் மூலம் நடாத்தி ஒன்றிணைத்தார்கள்.

காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்புமருந்து கிடைக்கச் செய்தல், பெண் பிள்ளைகளின் கல்வித்தரம் உயர்த்தல், வறிய நாடுகளுக்கு உதவுதல், பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் நாடுகள், துறைகள் மீண்டெழ உதவுதல், சர்வதேச ரீதியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிவிதித்தல் ஆகியவையைக் கொண்ட பட்டயமொன்றில் ஜி 7 நாடுகள் கைச்சாத்திட்டன.

https://vetrinadai.com/news/cornwall-meeting-g7/

நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இந்தியா முழு ஆதரவையும் கொடுக்கும் என்று சனியன்று மாநாட்டுத் தலைவர்களுடன் தொலைத்தொடர்பு மூலம் சந்தித்த மோடி உறுதியளித்தார். கொரோனாத்தொற்றின் மூலத்தை ஆராய்ந்து கண்டுபிடித்தல், சீனாவின் வேகமான பொருளாதார, இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு முட்டுக்கட்டை போடுதல், உலக நாட்டு மக்களின் ஆரோக்கியம் பேணுதல் போன்றவைகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச மனிதாபிமான அமைப்பான ஒக்ஸ்பார்ம் நடந்து முடிந்த ஜி 7 மாநாட்டை ஒரு முழுத் தோல்வியென்று விமர்சித்திருக்கிறது. குறிப்பிட்ட பணக்கார நாடுகளின் குறிக்கோளுக்கும், உலகின் மற்ற நாடுகளின் தேவைகளுக்குமிடையே இத்தனை ஆழமான வேறுபாடுகள் இதுவரை என்றுமே இருந்ததில்லை என்று அதன் தலைவர்களிலொருவரான மக்ஸ் லோசன் சாடியிருக்கிறார்.

முக்கியமான ஒரு விடயமாக உலக நாடுகளுக்கெல்லாம் தேவையான தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை 11 பில்லியனுக்கும் அதிகம் என்ற நிலைமையில் ஒரு பில்லியன்களை ஜி 7 நாடுகள் அடுத்த வருடம் கொடுப்பது வேதனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டார். தடுப்பு மருந்துகளின் காப்புரிமையை அகற்றி, முதலீடுகளைப் பெருக்கி உதவாமல் பணக்கார நாடுகள் ஆரம்பம் முதலே செய்ததுபோலத் தடுப்பு மருந்துகளின் தயாரிப்புக்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகின்றன என்று அவர் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *