பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா?
நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000 தடுப்பூசிகளை ஏற்கனவே கொடுத்துவிட்ட நாடுகளுமுண்டு. தொடர்ந்தும் வறிய நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதாக அறிவிப்புக்கள் வந்தபடியிருக்கின்றன.
அதே சமயத்தில் ஆபிரிக்காவிலிருந்து புதிய ஒரு பிரச்சினையும் சுட்டிக்காட்டப்படுகிறது. கொரோனாத் தொற்றுக்கள் பல பாகங்களிலும் கடுமையாகத் தொடர்ந்தும் பரவிவரும் வேளையில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் ஆயுட்காலம் அதிக நீளமானதல்ல. அவைகளை உரிய இடத்துக்குச் சேர்க்கும் ஒழுங்குகளில் இழுபறிகள் இருப்பதால் அவை சில நாடுகளுக்கு வந்து சேரும்போது அவைகளின் ஆயுட்காலம் முடியமுதல் அவைகளைப் பாவிக்க இயலாத நிலைமை உண்டாகிவிடுவதால் மில்லியன்கள் தடுப்பு மருந்துகளை வீசவேண்டியதாகிறது.
பணக்கார நாடுகள் தம்மிடம் உபரியாக மில்லியன்களை சேர்த்து வைத்துக்கொண்டு புதியவைகள் வரும்போது ஏற்கனவே சேர்த்துப் பாதுகாப்பில் வைத்திருந்தவைகளையே கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் தானமாகக் கொடுக்கிறார்கள். அதனால், தடுப்பு மருந்துகளின் ஆயுட்காலம் அவைகளைப் பெறும் நாடுகளுக்கு அவை வரும்போது மிகக் குறைவாகவே மீதமிருக்கிறது.
சமீபத்தில் கொங்கோ குடியரசு சுமார் 1.3 மில்லியன் தடுப்பு மருந்துகளைப் பாவிக்க முடியாதவை என்பதால் கோவாக்ஸ் திட்டத்துக்குத் திருப்பியனுப்பியது. தென் சூடான் 72,000 தடுப்பு மருந்துகளைத் திருப்பியனுப்புவதாக அறிவித்திருக்கிறது, 59,000 ஐ ஏற்கனவே குப்பையாக்கிவிட்டது. மலாவி 102,000 அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை மார்ச் 26 ம் திகதி பெற்றபோது அவைகளின் காலாவதியாகும் திகதி ஏபரல் 13 ஆக இருந்தது. எனவே 80 % ஐ மட்டுமே அவர்களால் உபயோகிக்க முடிந்தது.
பிரச்சினையொன்று புதியதல்ல என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. வறிய, நடுத்தர வசதியுள்ள நாடுகளுக்கு சகாய விலையில் விற்கப்படுவதாக, தானமாகக் கொடுக்கப்படும் மருந்துகளில் 10 விகிதமானவை பொய்யான மருந்துகள் அல்லது காலவரை முடிந்த மருந்துகளாகவே இருந்துவருகின்றன.
உலகில் மொத்தமாகப் பாவிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் 2 விகிதமே ஆபிரிக்க நாடுகளுக்கு இதுவரை கிடைத்திருக்கிறது. அவைகளில் 1.5 மில்லியனுக்கு அதிகமானவை காலாவதியானதால் குப்பைக்கே போயிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்