ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஈரானின் புதிய ஜனாதிபதியின் பெயர் இப்ராஹிம் ரைஸி.
நேற்று வெள்ளியன்று ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவர் நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஆசீர்வாதம் பெற்ற கடுமையான பழமைவாதியான வேட்பாளர் இப்ராஹிம் ரைஸி என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. விழுந்த வாக்குகளில் 62 விகிதமானவையை அவர் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஈரானில் நடக்கும் தேர்தல்களில் எவரெவர் போட்டியிடலாமென்பது ஏற்கனவே உயர்மட்ட ஆன்மீகத் தலைவர்கள் குழுவால் தீர்மானிக்கப்படும். எனவே, நாட்டின் ஷீயா இஸ்லாமிய ஆட்சிபீடத்துக்குச் சவால்விடக்கூடிய வேட்பாளர்கள் ஏற்கனவே வடிகட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு விடுவார்கள். வேட்பாளர்களாக அனுமதிக்கப்படுகிறவர்களில் ஆன்மீகத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றவரிடம் கண் துடைப்புப் போட்டியில் ஈடுபடுகிறவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்மீகத் தலைவர்களின் ஆசிபெற்ற இப்ராஹிம் ரைஸிதான் வெற்றி பெறப்போகிறாரென்ற கணிப்பீடு அவர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்ட நாளிலிருந்தே குறிப்பிடப்பட்டு வந்தது. பழமைவாதியும், அரசும், ஆன்மீகமும் மிகவும் நெருக்கமாக நாட்டை ஆளவேண்டுமென்று பகிரங்கமாகக் குறிப்பிடுபவர் அவர். ரைஸி நாட்டின் நீதித்துறைக்குத் தலைமைதாங்கியவர். அவரது கட்டளையின் பேரில்தான் 2019 இல் ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் ஜனநாயக இயக்கங்களின் மூலம் நாடெங்கும் பல பேரணிகள் நடாத்தியபோது இரும்புக் கைகொண்டு அடக்கியவர் என்று குறிப்பிடப்படுகிறது. அச்சமயத்தில் சுமார் 1,500 பேர் – பெரும்பாலும் இளவயதினர் – பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்விபரங்களெவற்றையும் ஈரானிய அரசு வெளியிட்டதில்லை.
நடந்த தேர்தலில் ஈரானின் 59 மில்லியன் மக்களில் 47 விகிதத்தினர் மட்டுமே வாக்களித்ததாகத் தெரியவருகிறது. இத்தேர்தலில் வாக்களிப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்குமென்று ஏற்கனவே கணிக்கப்பட்டது. சுமார் 20 முதல் 40 விகிதத்தினரே வாக்களிக்கக்கூடுமென்று குறிப்பிடப்பட்டு வந்தது. ஈரானிய அரசும், ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமெய்னியும் புரிந்துகொண்டு மக்களை வாக்குச் சாவடிகளுக்குப் போகும்படி கெஞ்சாத குறையாக வேண்டினார்கள் என்று ஊடகங்கள் குறிப்பிட்டு வந்தன.
பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குப் போவது நாட்டின் அரசியலமைப்புக்கு ஒரு சான்று என்று பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கும் ஆயதுல்லா கமெய்னிக்கு 50 விகிதத்துக்கும் குறைவானவர்களே வாக்களித்திருப்பது ஒரு மூக்குடைப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
இப்ராஹிம் ரைஸி, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை ஆதரிப்பவரும் கூட. சர்வதேசத்துடன் ஈரான் அணுசக்தி ஆராய்ச்சிக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ஒன்றிணைவதை எதிர்த்து வருபவர். ஒரு பக்கத்தில் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்த்தெழுப்பும் முயற்சிகள் நடக்கும்போது ரைஸி ஜனாதிபதியாவது நாட்டின் அரசியல் பாதையைப் பல வழிகளில் மாற்றியமைக்கும் என்று அரசியல் நோக்காளர்கள் கணிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்