பாரிஸில் இத்தாலியப் பெண் எலெக்றிக் உருளி மோதிப் பலி. ஓட்டிவந்த யுவதிகள் தப்பினர்.
எலெக்றிக் உருளியில் வந்த இரண்டு யுவதிகள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளனர். தரையில் வீழ்ந்து தலை அடிபட்டதால் கோமா நிலைக்குச் சென்ற அந்தப்பெண் பின்னர் உயிரிழந்தார்.
பாரிஸ் நகரில் George’s-Pompidou தெருவில் கடந்த திங்களன்று இடம்பெற்ற அந்த விபத்தில் காயமடைந்து சுயநினைவிழந்த 31 வயதான பெண் சில தினங்களில் உயிரிழந்துள்ளார்.
நகரில் இத்தாலி உணவகம் ஒன்றில் பணிபுரிந்த அவர் ஓர் இத்தாலியப் பிரஜை எனத் தகவல் வெளியாகி உள்ளது.பெண்ணை மோதிவிட்டு என்ன ஏது என்று கவனித்து அவருக்கு உதவாமல்தப்பிச் சென்ற இளம் யுவதிகளைப் பொலீஸார் தேடிவருகின்றனர்.
அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் அறியத்தருமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். பாரிஸில் trottinette électrique என்கின்றசிறிய எலெக்றிக் உருளிகளின் பாவனை அதிகரித்துவருகிறது. பாதசாரிகளை மோதுகின்ற சம்பவங்களும் அடிக்கடிநடக்கின்றன. ஒருவர் மட்டும் நின்றவாறு செலுத்திச் செல்லும் அந்த உருளிகளில் இளவயதினர் இருவர் ஏறிச் செல்வதும்வழக்கமாகி வருகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.