“எமக்கருகேயுள்ள அராபிய நாடுகளுடன் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வது எனது முக்கிய நடவடிக்கையாகும்,” இப்ராஹிம் ரைஸி.
வெள்ளியன்று நடந்த ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களின் மூலம் பதவியைக் கைப்பற்றிய இப்ராஹிம் ரைஸி தனது அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய எண்ணத்தை வேகமாக அறிவித்திருக்கிறார்.
“ஈரான் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். எனது குறி “அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தம்” உண்டாக்கிக்கொள்வது மட்டுமாக இருக்காது. எமது நாட்டை அடுத்திருக்கும் அராபிய நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன்,” என்று தனது நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் கொடுத்த பேட்டியொன்றில் ரைஸி தெரிவித்திருக்கிறார்.
இப்ராஹிம் ரைஸி ஒரு மதப் பழமைவாதியும் தனது சமயக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் கடுமையாக நிற்பவருமாகும் என்று கணிக்கப்படுகிறார். “அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் அமெரிக்கா தவறு செய்திருக்கிறது. அவர்களை மீண்டும் எங்களுடன் ஒப்பந்தத்தில் இணைந்துகொள்ளும்படி அறைகூவுவல் விடுக்கிறேன்,” என்று ரைஸி குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ஒப்பந்த விடயத்தில் ரைஸி விருப்பமில்லாதவர் என்று கருதப்பட்டாலும் கூட நாட்டின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா அலி கமேனியின் ஆசீர்வாதத்தின் பேரிலேயே அந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
யேமனிய அரசியலுக்குள் ஈரானுக்கு எதிராக அந்த நாட்டில் போரில் ஈடுபட்டுவரும் சவூதி அரேபியா அங்கிருந்து வெளியேறவேண்டும் என்றும் ரைஸி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் யேமனில் ஈரானின் ஆதரவுக் குழுவாக இருக்கும் ஹூத்தி அமைப்பினர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. அவர்களும் சவூதியும் அதன் ஆதரவு நாடுகளும் விரைவில் ஒரு ஒப்பந்தத்துக்கு வரும் என்று வெவ்வேறு பாகங்களிலிருந்து செய்திகள் வருகின்றன.
இப்ராஹிம் ரைஸி ஈரானின் மனித உரிமைப் போராட்டங்களில் ஈடுபடுபவர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கொலை செய்வதில் பின்னணியில் இருந்தவர் என்ற காரணத்துக்காக அமெரிக்கா அவர் மீது கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கிறது. அவைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், “நான் மனித உரிமைகளை எப்போதும் ஆராதிப்பவன். நாட்டின் பாதுகாப்பைக் கருதி நான் எடுத்த முடிவுகளுக்காக எனக்குப் பாராட்டுகளைத் தரவேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்