முஹம்மது அப்பாஸின் முக்கிய விமர்சகரொருவர் கைது செய்யப்பட்டு இறந்ததை எதிர்த்து பாலஸ்தீனர்கள் பேரணி.
வியாழனன்று அதிகாலையில் பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 பேர் நிஸார் பானத்தின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கியபின் கைது செய்தார்கள் என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள். நிஸார் பானத் நீண்ட காலமாகவே பாலஸ்தீன அதிகாரத்தின் முக்கிய ஒரு விமர்சகராக இருந்து வந்திருக்கிறார். கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்ட அவர் அங்கே இறந்தார்.
பானத்தின் இறந்த உடலை ஆராய்ந்த பிரேத பரிசோதகர்கள் அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல்களாலேயே அவர் இறந்திருக்கிறார் என்று தெரிவிக்கிறது. அவர் கைது செய்யப்படுவது இது முதல் தடவையல்ல. எட்டுத் தடவைகளுக்கும் அதிகமாகக் கைதுசெய்யப்பட்ட அவர் வெவ்வேறு அளவு காலம் காவலில் கழித்திருக்கிறார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றன.
ஹேப்ரூன், ரமல்லா, காஸா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் அக் அக்ஸா பள்ளிவாசல் பிராந்தியத்தில் இன்று பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் மற்றும் பாலஸ்தீன அரசுக்கு எதிரான பேரணிகள் நடந்தன. அவரது இறந்த உடலைத் தூக்கிச்சென்ற ஆயிரக்கணக்கானோர் பாலஸ்தீனக் கொடி, ஹமாஸ் இயக்கக் கொடிகளைச் சுமந்து “நீதி” கோரினர். முஹம்மது அப்பாஸைப் பதவியிலிருந்து இறங்கும்படியும் அவர்கள் கோஷமிட்டார்கள்.
பதினைந்து வருடங்களாகத் தேர்தல்களை வெவ்வேறு சாட்டுக்கள் சொல்லித் தள்ளிப்போட்டு வரும் பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸின் மீதான வெறுப்பு பாலஸ்தீனர்களிடையே அதிகரித்து வருகிறது இம்மாதம் நடக்கவிருந்த தேர்தலையும் அவர் தள்ளிப்போட்டார். அந்தத் தேர்தலில் வேட்பாளராக நிஸார் பான்னத் பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்